வேலூர்: வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி(Vellore CMC), சித்தூர் வளாகத்தில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் கல்வி அடிப்படையிலான மருத்துவமனையை அமைக்கும் திட்டத்தை இன்று வெளியிட்டுள்ளது. இதற்கு அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை ரூ.500 கோடி மானியம் வழங்குகிறது.
இதுதொடர்பாக சிஎம்சி வேலூர் இயக்குநர் டாக்டர் விக்ரம் மேத்யூஸ் கூறுகையில், "சித்தூர் வளாகத்தில் உள்ள புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் கல்வி அடிப்படையான மருத்துவமனையானது நமது நாட்டின் பொருளாதார, சமூக நெருக்கடிகளை உணர்ந்து பிரதி மாதிரியான பொருத்தமான மருத்துவ கல்வி, சுகாதார சேவை, ஆராய்ச்சி மற்றும் சமூக பணியை வழங்கிட வேண்டும் என்பதே எங்கள் கனவு.2025 ஆம் ஆண்டில் CMC வேலூர் தனது 125வது ஆண்டு விழாவில் அடியெடுத்து வைக்கும் இந்த பயணத்தில் எங்களுடன் கூட்டு சேர்ந்ததற்காக அசிம் பிரேம்ஜி அறக்கட்டளைக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என கூறினார்.
அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி அனுராக் பெஹர் பேசுகையில், "சிஎம்சி வேலூர் ஒரு முன்மாதிரியான நிறுவனம். ஆழ்ந்த சமூக அர்ப்பணிப்புடன் கூடிய மிக உயர்ந்த, தரமான கல்வி மற்றும் சுகாதார பணியில் ஈடுபட்டுள்ளது. இது இந்திய சுகாதாரத்திற்கான உண்மையான கலங்கரை விளக்கில் ஒன்றாக அவர்களை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இரண்டாவது மருத்துவக் கல்லூரியை நிறுவும் போது அவர்களுக்கு ஆதரவளிக்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்துள்ளது" என்றார்.
சிஎம்சி வேலூர் முதல்வர் டாக்டர் சாலமன் சதீஷ்குமார் கூறுகையில், "சித்தூர் வளாகத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், சுகாதார அறிவியல் பாடப்பிரிவுகள் மற்றும் செவிலியர் கல்லூரியுடன் கல்வி துவங்கியது. புதிய மருத்துவக் கல்லூரியானது முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சுகாதாரப் பராமரிப்பின் முன்னேற்றத்திற்கான தேசிய வளமாக உருவாகும் என்று நாங்கள் நம்புகிறோம். எந்தவொரு நிலையிலும் செயல்படக்கூடிய பொது மருத்துவர்களைப் பயிற்றுவிப்பதற்கான ஆணையோடு, தரமான முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என தெரிவித்தார்.
இதுகுறித்து டாக்டர் சாலமோன் கூறுகையில், "2020ம் ஆண்டில் கரோனா பெருந்தொற்று நோய் இந்தியாவின் சுகாதார அமைப்பை சீர்குலைத்தபோது தொடங்கிய இரு நிறுவனங்களுக்கிடையேயான நெருங்கிய தொடர்பை இந்த ஒப்பந்தம் உருவாக்குகிறது என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க : சிதம்பரம் கோயில் வளாகத்தில் கிரிக்கெட்! கண்டித்தவர் மீது தாக்குதல்.. ; தீட்சிதர்கள் 5 பேர் மீது வழக்கு!
CMC வேலூர்: இந்தியாவின் கல்வி, சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் CMC வேலூர் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் வேலூரில் அமைந்துள்ள வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியானது, சர்வதேச அளவில் புகழ்பெற்ற 3,675 படுக்கைகள் கொண்ட பல சிறப்பு சுகாதார நிறுவனமாகும்.
சிஎம்சியின் முதன்மை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை மருத்துவமனைகள் தமிழ்நாட்டின் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திலும் பரவியுள்ளன. நாடு முழுவதிலும் தெற்காசியாவிலிருந்தும் ஒவ்வொரு ஆண்டும் 32 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளுக்கு சேவை செய்து ரூ.300 கோடிக்கும் மேல் தொண்டு மானியங்களை வழங்கப்படுகிறது.
கல்வித் துறையில், சிஎம்சி வேலூர் இந்திய அரசாங்கத்தால் தொடர்ந்து 3வது இடத்தை பிடித்துள்ளது. முழு தொகையின் ஒரு பகுதியிலேயே ஒவ்வொரு ஆண்டும் 2000 மாணவர்களுக்கு மருத்துவம், செவிலியர் மற்றும் அதைசார்ந்த சுகாதாரக் கல்வி CMC வேலூரில் 229 படிப்புகள் மூலம் வழங்கப்படுகிறது. தொலைதூரக் கல்வித் திட்டங்களின் மூலம் சுமார் 1300 மாணவர்கள் பயனடைகின்றனர்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-10-2024/22644762_whatsup.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்