சென்னை: அவசர தேவைகளுக்காக விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை கடத்திச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை, மேல்மருவத்தூர் அருகே ஆம்புலன்ஸ் உடன் மடக்கிப் பிடித்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு விமான முனைய புறப்பாடு பகுதி அருகே, நுழைவாயில் முன் பிரபல மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று அவசர தேவைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர் கணேசன் (30) கழிவறைக்குச் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, திடீரென வாகனம் மாயமாகியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் கணேசன், விமான நிலைய வளாகம் முழுவதும் தேடியுள்ளார். எங்கு தேடியும் ஆம்புலன்ஸ் கிடைக்காததால், சென்னை விமான நிலைய போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில், சென்னை விமான நிலைய போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்ததில், ஒருவர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறி, அதனை ஓட்டிச் செல்லும் காட்சி பதிவாகிய இருந்துள்ளது.
மேலும், திருடப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஜி.பி.எஸ் கருவி இருந்த நிலையில், அதை கண்காணித்தபோது ஆம்புலன்ஸ் வாகனம், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
உடனே, இது குறித்து மேல்மருவத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், தொழுப்பேடு சுங்கச் சாவடியில் வைத்து ஆம்புலன்ஸ் வாகனத்தை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர். இந்த தகவல் சென்னை விமான நிலைய போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, உடனடியாக விரைந்து சென்று ஆம்புலன்ஸ் வாகனத்தைக் கைப்பற்றி, கடத்திச் சென்றவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில், ஆம்புலன்ஸ் வாகனத்தை கடத்திச் சென்றவர், சென்னையை அடுத்த செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாதவன் (35) என்பது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து, மாதவனை கைது செய்த போலீசார், சென்னை விமான நிலைய காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தன்னை சிலர் விரட்டி வந்ததாகவும், அவர்களிடம் இருந்து தப்பிக்கவே ஆம்புலன்ஸ் வாகனத்தை கடத்திச் சென்றதாகவும் மாதவன் கூறியுள்ளார். ஆனால், அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சட்லஜ் நதியில் கவிழ்ந்த கார்.. சைதை துரைசாமி மகன் மாயம்; தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி சன்மானம் அறிவிப்பு!