கடலூர்: கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் என்பவர் தகவல் அளித்துள்ளார். இந்த நிலையில்,
தகவல் அளித்த தன்னுடைய அடையாளத்தையும், போன் நம்பரையும் காவல்துறையினர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் கும்பலிடம் கொடுத்ததாக ஜேசுதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் சட்டவிரோதமாக மது விற்பவர்கள் தன்னைக் கொலை செய்வதற்காகக் கத்தியோடு தேடிக் கொண்டுள்ளனர் எனவும், இதனால் உயிருக்குப் பயந்து தான் தலைமறைவாக ஒரு தோப்புக்குள் இருப்பதாகவும், தன்னை உடனடியாக அவர்களிடம் இருந்து காப்பாற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் கட்டுப்பாட்டு அறையின் அவசர உதவி எண்ணான 100-க்கு போன் செய்து ஜேசுதாஸ் கூறியுள்ளார்.
இதுமட்டுமல்லாது, தான் இதுவரை மூன்று முறை அவசர உதவி எண் 100-க்கு போன் செய்து, சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் தன்னைக் கொலை செய்ய முயற்சிப்பது குறித்து தகவல் கொடுத்தும் தனக்கான பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும், தன்னுடைய மனக்குமுறலையும், வேதனையையும் ஜேசுதாஸ் வெளிப்படுத்திக் காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள காவலரிடம் பேசிய ஆடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.
இத்தகைய சூழலில், தற்போது இந்த ஆடியோவும் மற்றும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது. மேலும், சிக்கலில் மாட்டி உள்ளதால் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என ஜேசுதாஸ் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாகர்கோவில் பாலியல் வழக்கு; 4 ஆண்டுகளுக்குப் பின் காசியின் நண்பர் ராஜேஷ் சிங் கைது!