திருநெல்வேலி: திருநெல்வேலி பெருமாள்புரத்தைச் சார்ந்தவர் உதய தட்சாயினி (23). எம்.காம் பட்டதாரியான இவர், பாளையங்கோட்டை நம்பிக்கை நகர் பகுதியைச் சார்ந்த மதன் குமார் (28) என்பவரை ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
மதன்குமார் திருநெல்வேலியில் உள்ள தனியார் கார் ஷோரூமில் பணியாற்றி வருகிறார். இவர் திராவிடர் தமிழர் கட்சியிலும் உறுப்பினராக உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று வீட்டை விட்டு வெளியேறிய உதய தாட்சாயினி, காதலன் மதன்குமார் உடன் ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்ததாக தெரிகிறது.
பெண்ணைக் காணவில்லை என குடும்பத்தினர் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்திருந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையினர் கட்சி அலுவலகத்துக்கு வந்துள்ளனர். அவர்களிடம் சரியான தகவல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
திருமணம் முடித்த பிறகு காவல் நிலையத்திற்கு வருவார்கள் எனக் கூறியுள்ளனர். இதற்கிடையில், நேற்று மாலை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள லெனின் சிலை முன்பு உதய தாட்சாயினியும், மதன்குமாரும் கட்சியினர் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் தான் இந்த கல்யாணத்தை நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் உள்பட பிற கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான தகவல் பெண் வீட்டாருக்கு கிடைக்க, நேற்று பிற்பகலில் பெண்ணின் பெற்றோர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் கம்யூனிஸ்ட் அலுவலகம் வந்து பெண்ணை தங்களோடு அனுப்ப வேண்டுமெனக் கேட்டுள்ளனர்.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். பெண்ணும் அவர்களோடு செல்ல விரும்பவில்லை என தெரிகிறது. இந்த நிலையில், பெண் குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது பெண்ணின் உறவினர்கள் அங்கிருந்த கம்யூனிஸ்ட் உறுப்பினர்களைப் பார்த்து, உங்கள் வீட்டுப் பெண்ணிற்கு இப்படி நடந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என சரமாரியான கேள்விகளை முன் வைத்தனர்.
பின்னர், பெண்ணின் குடும்பத்தினர் கட்சி அலுவலகத்தில் உள்ள கண்ணாடிகள், சேர்கள், டேபிள்களை அடித்து நொறுக்கியதாக தெரிகிறது. இந்தச் சம்பவத்தின் போது போலீசார் சிலர் அங்கிருந்தும் சம்பவத்தை தடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
பெண்ணின் தாய் தனது மகளைத் தேடி கதறி அழுதார். இதனால் சுமார் 30 நிமிடம் அங்கு களேபேரமாக காட்சி அளித்தது. பின்னர் ஒருவழியாக போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதற்கிடையில், பொருட்கள் உடைக்கப்பட்டது தொடர்பாக பெருமாள்புரம் காவல் நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
அதன்பேரில், பெண்ணின் தாய் சரஸ்வதி, சகோதரர் சரவணகுமார் உள்பட 12 பேரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், 7 பெண்கள் உள்பட 12 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளி - கார் ஷெட் - குடியிருப்பு.. திருப்பத்தூரை பரபரப்பாக்கிய சிறுத்தை பிடிபட்டது!