சிவகங்கை: சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் நாச்சியப்பன். இவர் சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். தனது நண்பர்களுடன் காரைக்குடி வந்த இவர், 100 அடி சாலையில் உள்ள GV கோல்ட் பைனான்ஸ் நகை அடகுக் கடையில், 147 கிராம் எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைக்க முயற்சி செய்துள்ளார். சந்தேகம் அடைந்த அடகு கடை உரிமையாளர் விக்னேஷ், நகையைப் பரிசோதனை செய்து பார்த்துள்ளார்.
அப்போது, ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டிருந்த நகை, முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து நாச்சியப்பனைப் பிடித்து வைத்த நகைக்கடை ஊழியர்கள், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்து வந்த போலீசார், நாச்சியப்பனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணையில், அவர் தனது நண்பர்களான சென்னை முகப்பேரைச் சேர்ந்த தமிழ்வாணன், கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன், காரைக்குடியைச் சேர்ந்த ராஜகோபால், ராமசாமி, கேரளாவைச் சேர்ந்த பீனு மற்றும் சுபாஷ் குமார் ஆகியோருடன் சேர்ந்து, இது போன்று போலி நகைகளை அடகு வைத்து, பல ஊர்களில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.
உடனடியாக நாச்சியப்பனையும், அவருடன் வந்த கூட்டாளிகள் ஏழு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 147 கிராம் போலி நகைகள் மற்றும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய இரண்டு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.