மதுரை: இந்து தெய்வங்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் கானா பாடகி இசைவாணியை காவல்துறை கைது செய்ய வேண்டும் என இந்து மகா சபா சார்பில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்து மத தெய்வமான சபரிமலை ஐயப்பன் குறித்து பாடகி இசைவாணி பாடிய பாடல் தமிழ்நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், மதுரை ஜெய்ஹிந்த் படம் காவல் நிலையத்தில், இந்து மகாசபை சார்பில் இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.
இந்து மகாசபை மாநில இளைஞரணி துணைத் தலைவர் இளவரசன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் மனு வழங்கினர்.
அந்த புகார் மனுவில், “சமூக வலைதளங்களில் நீலம் எனும் அமைப்பின் இசைக்குழுவைச் சேர்ந்த இசைவாணி என்ற பெண், சமூக வளைதளங்கள் மற்றும் பிஹைண்டு டாக்கீஸ் (Behind Takies) எனும் யூடியூப் பக்கத்திலும், ஐ ஆம் சாரி ஐயப்பா (I'M SORRY AYYAPPA) எனும் பாடலை பதிவேற்றியுள்ளர். அந்த பாடலில் ‘ஐயம் சாரி ஐயப்பா; உள்ளே வந்தால் தீட்டாப்பா’ எனும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: இசைவாணி ஐயப்ப பாடல் விவகாரம்: “அறிவு புகட்டி அனுப்பப்பா” ஐயப்பனை நாடிய எம்.எஸ்.பாஸ்கர்!
கார்த்திகை மாதங்களில் மாலை அணிந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு, இந்த பாடல் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொடர்ந்து இந்து தெய்வங்களை குறிவைத்து கேவலமாக பாடல் பாடி வருகிறார். பெரும்பான்மை மக்களின் தெய்வமாக விளங்கும் சபரிமலை ஐயப்பன் மீது தரக்குறைவான பாடலை பாடி மக்கள் மனதை புண்படுத்திய இசைவாணி மீது தக்க நடவடிக்கை வேண்டும்,” என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அகில இந்திய இந்து மகாசபா மாநில இளைஞரணி துணைத் தலைவர் இளவரசன் பேசுகையில், “தொடர்ந்து இசைவாணி இது போன்று இந்து தெய்வங்களை குறி வைத்து கேவலமாக பாடி வருகிறார். இவருக்கு திரைப்பட இயக்குநர் ரஞ்சித் உடந்தையாக இருக்கிறார்.
நாங்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளோம். நடிகை கஸ்தூரியை கைது செய்து நடவடிக்கை எடுத்தது போல பாடகி இசைவாணி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக போராட்டத்தில் ஈடுபடுவோம்,” என்றார்.
இதையும் படிங்க: ''I am sorry ayyappa''.. இசைவாணி மீது இந்து முன்னணியினர் கோவை மாநகர போலீசில் புகார் மனு!