சென்னை: சென்னையில் கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 16 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இதில் ஒருவரான திருவேங்கடம் என்ற முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர், கடந்த ஜூலை 15 ஆம் தேதி போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த சம்பவத்தில் பல்வேறு ரவுடிகள் ஒன்றிணைந்து, திட்டம் தீட்டி, ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த கொலையில் சென்னை புறநகர் பகுதியில் உள்ள பிரபல ரவுடியும், ஏ+ கேட்டகிரி ரவுடியுமான சீசிங் ராஜாவுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகப்படுகின்றனர். இவர் ஆற்காடு சுரேஷின் கூட்டாளியாக இருந்திருப்பது தெரியவந்த நிலையில், கொலை திட்டத்தில் இவரும் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் விசாரணையில் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டால் தான் உண்மை நிலவரம் வெளியே வரும் என்பதால், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் ரவுடி சீசிங் ராஜா ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் ஆந்திரா சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் குன்றத்தூரில் வசித்து வரும் சீசிங் ராஜா குடும்பத்தாரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் செல்போன்களையும் சோதனை செய்து கண்காணித்து வருகின்றனர். மேலும் சீசிங் ராஜா ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து, தொழிலதிபர்களை மிரட்டி பணம் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர் என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; கூலிப்படை புரோக்கர் ஹரிகரனை காவலில் எடுக்கப்போவதாக தகவல்!