அரியலூர்: அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் டி.எஸ்.பி அலுவலகத்திற்கு எதிர்புறம் உள்ள தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் மருந்து விற்பனையாளராக பணியாற்றி வருகின்றார்.
நேற்று இரவு தனது வீட்டின் முன் பல்சர் பைக்கை நிறுத்தி சைடு லாக் செய்துவிட்டு வீட்டிற்குள் சென்றிருக்கிறார். இன்று காலை எழுந்து பார்த்த போது பைக்கை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து செந்தில்குமார் வீட்டிலிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து பார்த்தபோது, இரவு 1.40 மணியளவில் தெரு நாய்களைக் கல்லால் அடித்து விரட்டிவிட்டு மர்மநபர் ஒருவர் பைக் அருகில் வந்தது தெரியவந்துள்ளது.
அந்த மர்ம நபர் தன்னுடைய ஷூவை கழட்டிவிட்டு, வெறும் காலுடன் நடந்து வந்து பல்சர் வாகனத்தின் சைடுலாக்கை தனது கையால் உடைக்க முயற்சித்துள்ளார். அதில் தோல்வி அடைந்தவுடன், வாகனத்தின் மேல் ஏறி அமர்ந்து இரண்டு கால்களை வைத்து சைடுலாக்கை மிக லாவகமாக உடைத்துள்ளார். பின் தன்னுடைய ஷூவையும் அங்கிருந்து எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்த பைக் திருட்டு குறித்த வீடியோ பதிவுடன் செந்தில்குமார் அரியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அரியலூர் போலீசார் சிசிடிவி காட்சியை வைத்து திருடனைப் பிடிக்கத் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சாலையில் நடந்து சென்ற பெண்ணை முட்டி தூக்கிய மாடு.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!