அரியலூர்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து, அதற்கான தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியானது. இதில் மொத்தமாக 7,60,606 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்த நிலையில், மாநிலம் முழுவதும் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த அஸ்விதா என்ற மாணவி 600க்கு 597 மதிப்பெண்கள் எடுத்து சாதனை பிடித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மீன்சுருட்டி கிராமத்தில் ஹோட்டல் நடத்தி வருபவர் கொண்டல்ராஜ் - சீத்தம்மாள் தம்பதி. இவர்களது மகள் அஸ்விதா. இவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குழவடையான் கோகிலாம்பாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் பயோ-கணிதம் (Bio-Maths) பாடப்பிரிவு எடுத்து பயின்றார்.
இதைத் தொடர்ந்து, நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் தமிழ் பாடப்பிரிவில் 99, ஆங்கிலம் 98, கணக்கு 100, இயற்பியல் 100, வேதியியல் 100, உயிரியல் 100 மதிப்பெண்கள் என 600 மதிப்பெண்களுக்கு 597 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாணவி அஸ்விதா, "மீன்சுருட்டியில் எனது தந்தை ஹோட்டல் நடத்தி வருகிறார். மிகவும் சிரமப்பட்டு என்னை எனது பெற்றோர்கள் படிக்க வைத்தனர். நானும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து படித்து வந்தேன். வருங்காலத்தில் மருத்துவராகி ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்வதே எனது வாழ்நாள் லட்சியம்" எனத் தெரிவித்தார். முன்னதாக சாதனை மாணவி அஸ்விதாவுக்கு, அவரது பெற்றோர் மற்றும் கல்வி நிர்வாகத்தினர் இனிப்பு வழங்கி, சால்வை அணிவித்துப் பாராட்டினர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் 589 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த மாணவி ஸ்ரீமதி..!