சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் கல்வி கற்கும் வாய்ப்பினை முடக்க நினைக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கினை அறிவுச் சமூகம் வன்மையாகக் கண்டிக்கிறது என அறிவுச் சமூகத்தின் தலைவரும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கள்ளர் பள்ளிகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தமிழ் முதல்வன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு 2024 - 2025ஆம் கல்வி ஆண்டு தொடங்கி ஒரு மாத காலம் நிறைவுற்ற நிலையில், பழங்குடியினர் நலத்துறையில் சுமார் 450-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும். ஏற்கனவே நீக்கப்பட்ட தொகுப்பூதிய ஆசிரியர்களை மீண்டும் உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும்.
இது குறித்து கோரிக்கை விடுத்த துறை சார்ந்த ஆசிரியர் காப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைமை நிர்வாகிகள் விவேக், சுதாகர், சங்கர சபாபதி ஆகியோருக்குக், குற்றக் குறிப்பாணை வழங்கி விளக்கம் கேட்டிருப்பதோடு அல்லாமல் 17 (b) விதியின் கீழ் பெருங்குற்றமாக நடவடிக்கை எடுத்திருப்பதை மிகப்பெரும் சர்வாதிகாரப்போக்காகக் கருதுகிறோம்.
அரசு ஜனநாயகப்பூர்வமான செயல்களைக்கூட கொடுமையாகக் கையாளுகிறது. இந்த அரசு ஆதிதிராவிடர் பழங்குடியினர், கள்ளர் நலத்துறைப் பள்ளிகள் ஆகியவற்றை அழிக்க முயற்சிக்கிறது. பல ஆண்டுகாலம் பழங்குடியினப் பள்ளிகள் ஆசிரியர் இல்லாமலும், ஓர் ஆசிரியரைக் கொண்டும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், சிறப்பு அரசாணையின் மூலம், எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு சுமார் 300 பழங்குடியின ஆசிரியர்கள் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக அரும்பணியாற்றியதன் விளைவாக, மாணவர்களின் சேர்க்கை விகிதம் மற்றும் தேர்ச்சி விகிதம் உயர்ந்து இருக்கிறது.
மேலும், அண்மையில் நடந்து முடிந்த பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் மாநிலத்திலேயே இரண்டாவது நிறுவனமாக பழங்குடியினர் நலத்துறை நிர்வாகத்தை அப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர்த்தியிருக்கிறார்கள்.
இவ்வாறான நியாயமான ஜனநாயகப்பூர்வமான கோரிக்கைகளை வெளியிட்ட விவேக், சுதாகர், சங்கர சபாபதி ஆகியோர் மீதான, விளக்கம் கேட்கும் கடிதத்தினைத் திரும்பப் பெறவேண்டும். ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும். மீறினால் போராட்டங்கள் வெடிக்கும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "2026-ல் அண்ணாமலை எங்கே போட்டியிட்டாலும் தோல்வியடைவார்" - மாணிக்கம் தாகூர் பேச்சு! - Manickam Tagore