சென்னை (அம்பத்தூர்/ஆவடி): சென்னை புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை புறநகர்ப் பகுதியான கொரட்டூர் இஎஸ்ஐ மருந்தகத்தை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் இங்கு மருந்து வாங்க வருவோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மருந்தகம் வளாகத்திற்கு செல்ல தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில் செங்கற்களை வைத்து அதன் மீது பேலன்ஸ் செய்து நின்று கடந்து செல்ல கூடிய சூழல் உருவாகியுள்ளது.
இதனால் வயதான நோயாளிகள் இவ்வாறு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அவர்கள் மருந்து வாங்க முடியாமல் திரும்பிச் செல்லும் சூழல் நிலவுகிறது. இப்போது மட்டுமின்றி ஒவ்வொரு பருவமழை காலத்திலும் இந்த மருந்தகத்தில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி மருந்தகத்துக்குள் தண்ணீர் புகுவதால் மருந்துகள் நீரில் வீணாகும் நிலையும் தொடர்கிறது,
தற்காலிகமாக தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற அவ்வப்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மருந்தகம் தாழ்வான பகுதியில் மழை நீர் தொடர்ச்சியாக தேங்கும் நிலை நீடித்து வருவதாக பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இனி வரும் காலங்களில் மழை நீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என அரசுக்கு அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை புறநகர், திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழை... வேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்!
வங்க கடலில் நிலை கொண்டுள்ள பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளான ஆவடி,பட்டாபிராம்,திருநின்றவூர், திருமுல்லைவாயல், உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆவடி அடுத்த பட்டாபிராம் சேக்காடு பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி உள்ளதால் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை மூடபட்டுள்ளதால் சேக்காடு, கோபாலபுரம், தென்றல் நகர்,கரிமா நகர்,ஆவடி,ஆவடி காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் சுமார் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதே போன்று ஆவடி,பட்டாபிராம்,அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்ல முடியாமலும், அவசர தேவைக்காக,மருத்துவ அவசரங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், சாலையில் தேங்கிய மழை நீரை ஜேசிபி இயந்திரம் கொண்டு, பாதை ஏற்படுத்தி சுரங்க பாதைக்குள் திருப்பி விட்டுள்ளனர். இதனால் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. சுரங்கப்பாதையை பராமரித்து வரும் ஆவடி மாநகராட்சி நிர்வாகம் பாலத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி போக்குவரத்திற்கு வழிவகை செய்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.