சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் குப்பைகளை முறையின்றி கொட்டுதல் மற்றும் எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சில நேரங்களில் பொதுமக்களுக்கு இது இடையூறாகவும் அமைந்து விடுகிறது. பொதுமக்களின் இந்த பொறுப்பற்ற போக்கை தடுக்கும் விதமாக, பொது இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 5000 ரூபாய் வரை உயர்த்தி சென்னை மாநகராட்சியின் அக்டோபர் மாத கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வருகிறது ஏ.ஐ. கேமரா: இந்த நிலையில், சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிரம்பி வழியும் குப்பை தொட்டிகள் அமைந்துள்ள இடங்கள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு உடனே தகவல் அளிக்கும் விதத்தில் ஹாட்ஸ்பாட் எனப்படும் அவ்விடங்களை AI கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணியை மாநகராட்சி விரைவில் தொடங்க உள்ளது.
GCC will install AI enabled CCTV cameras to monitor the Garbage Vulnerable Points (Hotspots) and they will be linked with Integrated Command and Control Centre @chennaicorp
— Kumaragurubaran (KGB) (@kgbias) October 23, 2024
ஏ.ஐ. கேமரா பொருத்துவது மற்றும் பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் இருந்து அக்டோபர் மாதம் இதுவரை வசூலிக்கப்பட்ட அபராதம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தன்னுடைய X தள பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், 'சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிரம்பி வழியும் குப்பை தொட்டிகள் அமைந்துள்ள இடங்களை கண்காணித்து, அதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு உடனே தகவல் அளிக்கும் விதத்தில் ஹாட்ஸ்பாட் எனப்படும் அவ்விடங்களில் AI கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளன' என்று குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
வசூல் எவ்வளவு?: அத்துடன், புதிதாக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்த அபராதத் தொகையின்படி, பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் இருந்து அக்டோபர் மாதத்தில் இதுவரை ஸ்பாட் ஃபைன் (spot fine) மூலம் வசூல் செய்யப்பட்ட தொகை குறித்த தகவலை மாநகராட்சி ஆணையர் மண்டலவாரியாக வெளியிட்டுள்ளார்.
Levying spot fine under SWM Rules. Zone wise details. @chennaicorp pic.twitter.com/QXPpr9t1Lb
— Kumaragurubaran (KGB) (@kgbias) October 23, 2024
அதில், 'மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் இருந்து மொத்தமாக 17 லட்சத்து 96 ஆயிரத்து 800 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டது' என்று அவர் தெரிவித்துள்ளார்.
மண்டலவாரியாக வசூல் விவரம்:
மண்டலம் | வசூல் தொகை (ரூபாயில்) |
1 | 1,42,000 |
2 | 1.06,000 |
3 | 1,66,300 |
4 | 1,73,700 |
5 | 2,14,400 |
6 | 37,000 |
7 | 1,12,800 |
8 | 78,000 |
9 | 91,300 |
10 | 2,25,500 |
11 | 97,400 |
12 | 1,24,700 |
13 | 70,000 |
14 | 68,800 |
15 | 88,900 |
ஸ்பாட் ஃபைன்: 468 ஸ்பாட் ஃபைன் கருவிகள் IOB வங்கியிடம் இருந்து பெறப்பட்டு 70 சாதனங்கள் மூலம் அபராதம் வசூல் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த POS சாதனங்கள் மூலம் அபராதம் மட்டுமல்லாது மாநகராட்சியின் வரிகளையும் வசூல் செய்ய முடிகிறது.
ஸ்பாட் ஃபைன் விதிக்கப்படுவோர், தங்களுக்கான அபராதத் தொகையை டெபிட், கிரெடிட் கார்ட், UPI,டிமாண்ட் டிராஃப்ட்கள் அல்லது காசோலை மூலம் செலுத்தலாம் எனவும், ஆன்லைனில் பணம் செலுத்துவதால் பணம் நேரடியாக மாநகராட்சிக்கு அனுப்பப்படுகிறது என்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.