சென்னை: பூவிருந்தவல்லி அருகே உள்ள வானகரத்தில் அப்போலோ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தற்போது, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ஆயூர்வைத் (Apollo ayurVAID) என்ற சிறப்பு மையத்தைத் துவக்கியுள்ளது. அதனை அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாக துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி துவக்கி வைத்தார்.
இங்கு, உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகளுக்கான மேம்பட்ட உடல்நல பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்காக, நீண்ட பாரம்பரிய ஆயுர்வேதத்தை இன்றைய நவீன மருத்துவத்துடன் கலந்து மேம்பட்ட மருத்துவ சேவைகளை வழங்குவது, சுகாதாரப் பாதுகாப்பில் மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்கும் வகையில் உள்ளது.
இந்தியாவின் அனுபவமுள்ள முன்னணி ஆயுர்வேத மருத்துவர்களால் மேற்பார்வையிடப்படும் உயர்தர, பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவப் பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது. உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சிகிச்சை நிபுணர்களில் பெரும் அனுபவம் பெற்றவரால் ஒருங்கிணைந்த மருத்துவப் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது.
மேலும், இதில் நரம்பியல், எலும்பியல், வளர்சிதை மாற்றக் கோளாறுகள், சுவாசக் கோளாறுகள், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், சரும் மருத்துவம் [neurology, orthopedics, metabolic disorders, respiratory disorders, gynecology, pediatrics, dermatology] உள்ளிட்ட பல சிறப்பு மருத்துவத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாக துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி கூறும்போது, "அப்போலோ ஆயுர்வைத் மருத்துவமனை அப்போலோ மருத்துவமனை வளாகத்துடன் இணைந்திருக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புற்றுநோய் மற்றும் தீவிர சீரழிவு நரம்பியல், சிறுநீரகவியல் மற்றும் எலும்பியல் கோளாறுகள் போன்றவற்றுடன் போராடும் நோயாளிகள், தீவிரமான மற்றும் நாள்பட்ட மருத்துவ நிலைமைகள், மருத்துவ நெறிமுறைகள் அடிப்படையிலான ஸ்டெப்-டவுன் பராமரிப்பு, ஒருங்கிணைந்த மறுவாழ்வு, நோயிலிருந்து மீண்டு வாழ்தல் மற்றும் வாழ்க்கையின் இறுதி சூழலுக்கான பராமரிப்பு ஆகியவற்றில் மிகத் துல்லியமான ஆயுர்வேத சிகிச்சைகளை எளிதில் பெற முடியும்.
அப்போலோ ஆயுர்வைத் மூலம் ஒருபுறம் நவீன மருத்துவத்தின் அதிநவீன திறன்களைப் பயன்படுத்தி, நோய்களுக்கு எதிராக அசைக்க முடியாத பாதுகாப்பை கொடுப்பதோடு, மறுபுறம் ஆயுர்வேதத்தின் காலம் கடந்தும் நிலைத்திருக்கும் ஞானத்தையும், தனிமனித ஆரோக்கியத்தையும் தொடர்ந்து வளர்த்தெடுத்து வருகிறது. அதற்காக ஒருங்கிணைத்து முழுத்திறனையும் வெளிப்படுத்தும் அணுகு முறையானது, நோய்களைக் குணப்படுத்துவது மட்டுமல்லாமல், நோயாளிகளின் நல்வாழ்வையும் உத்வேகப்படுத்துகிறது" எனத் தெரிவித்தார்.