சென்னை: ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் காவல் ஆணையர் கி.சங்கர் ஏற்பாட்டில் ஆயுதப்படை மைதானத்தில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் உலக சாதனை நிகழ்ச்சி இன்று(பிப்.5) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 3ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழகத்தின் டிஜிபி சங்கர் ஜிவால் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மேலும் மாணவர்கள் ஆவடி காவல் ஆணையரகம் முன்பு, "எனக்கு போதை வேண்டாம்.. நமக்கும் போதை வேண்டாம்.. SAY NO TO DRUGS" என்ற வாசகங்களுக்கு ஏற்றார் போல், ஒருங்கிணைந்து நின்றபடி போதைபொருட்களுக்கு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். மாணவ மாணவிகளுடன் இணைந்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், ஆவடி காவல் ஆணையர் கி. சங்கர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சிக்குப் பின்னர் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஆவடி காவல் ஆணையரகத்தில் சுமார் ஆயிரத்து 800 மாணவிகள், ஆயிரத்து 800 மாணவர்கள் என 3ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து பல்வேறு விதங்களில் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பள்ளி, கல்லூரி, தொழில் நிறுவனங்களிடமும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மத்திய அரசு ஏஜென்சி மூலம் நடத்தப்பட்ட ஆய்விலும் தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும்தான் குறைந்த அளவிலான போதை பொருட்கள் உள்ளது என தெரியவந்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் அதிகளவில் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு போதை பொருள்கள் அதிகளவில் விநியோகிக்கப்படுவதாக அர்த்தம் கிடையாது. அதிக அளவில் நடவடிக்கை மேற்கொண்டதே காரணமாகும். அதேப்போன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு அடைந்து, பொதுமக்களும் எங்களுடன் கை கோர்க்கும்போது 2 கைகளும் ஒன்று சேருகிறது. அப்போது போதை பொருளை முழுமையாக ஒழிக்க முடியும்.
முன்பு போல் தமிழகத்தில் தற்போது கஞ்சா கிடையாது. ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்தது தான் வரவழைக்கப்படுகிறது. அங்கு இருக்கும் கஞ்சா விற்பனையாளர்கள் கைது செய்யபடுகிறார்கள். அதேப்போல் தென் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்து கருத்தரங்கு வைத்து, அதன் மூலம் ஆந்திரா டிஜிபி நடவடிக்கை மேற்கொண்டதில், அங்கு பாதிக்கும் மேல் கஞ்சா புழக்கம் தடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஒடிசா மற்றும் அசாம் மாநிலத்திற்கும் தகவல் கொடுத்துள்ளோம். கைது செய்தால் மட்டும் போதாது, அவர்கள் சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'தமிழகத்தில் ஏப்.20-ல் தேர்தல் நடக்க வாய்ப்பு'- ஹெச்.ராஜா கூறிய முக்கிய தகவல்..!