திருநெல்வேலி: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில், பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ஜெயக்குமாரின் உடல் அவரது சொந்த ஊரான திசையன்விளை அளித்த கரைசுத்து புதூரில் இன்று நல்லடக்கம் செய்யப்படுவதற்காக ஏற்பாடுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகின்றது.
பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனைக்குப் பின்னர், ஜெயக்குமாரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கரைசுத்து புதூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உட்பட முக்கிய பிரமுகர்கள் நேரில் ஜெயக்குமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயக்குமார் உயிரிழப்பதற்கு முன்பு அதாவது, கடந்த 30 ஆம் தேதி மரண வாக்குமூலம் என அவர் எழுதியதாக கடிதம் ஒன்றை அவரது மகன் காவல்துறையிடம் ஒப்படைத்திருந்தார்.
அந்த கடிதத்தில், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு உட்பட ஆறு பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் 6 பேரும் தன்னிடம் பல லட்சம் பணத்தை பெற்று விட்டு ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்ததாக தெரியவருகிறது. இது போன்ற சூழ்நிலையில், ஜெயக்குமார் தனது மருமகனுக்கு எழுதியதாக மற்றொரு கடிதம், ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்த கடிதத்தையும் உறவினர்கள் காவல்துறையினரிடம் கொடுத்துள்ளனர்.
இதில் அவர் யார் யாருக்கெல்லாம் பண பரிமாற்றம் செய்தார் என்ற விபரமும் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் "தனது ஒப்பந்தம் படி யார் யாருக்கெல்லாம் வீடுகள் கட்டிக் கொடுத்தாரோ, அவர்களுடைய பாக்கி நிலவரத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும், அவர்களிடமிருந்து வசூல் செய்து குடும்பத்தினருக்கு கொடுக்குமாறும் எழுதப்பட்டிருந்தது.
அதோடு, தனது சாவுக்கு காரணமானவர்களை குடும்பத்தினர் யாரும் பழிவாங்கக் கூடாது என்றும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டம் தனது கடமையை செய்யும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நெல்லை ஜெயக்குமார் மரணம்: 'யாராக இருப்பினும்.. பாரபட்சமில்லாமல் நடவடிக்கை' - செல்வப்பெருந்தகை!