கோயம்புத்தூர்: கோவையில் கடந்த 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பல இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் உயிரிழந்தவர்களுக்கு, இந்து அமைப்புகள் சார்பில், ஆர்.எஸ்.புரம் பகுதியில் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, உயிரிழந்தவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “1997ஆம் ஆண்டு லீக்கான ஜெயின் கமிஷன் விவகாரத்தை இந்தியா டுடே வெளியிட்டு இருந்தது. முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட ஜெயின் கமிஷன் அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதி, விடுதலைப் புலிகள் அமைப்பை தமிழகத்தில் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார் என்றும், காவல்துறையினரை விடுதலைப் புலிகள் அமைப்பினர் இருக்கும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தியிருந்தார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
கோட்டை ஈஸ்வரன் கோயில் சம்பவம் நடந்தபோது ஆட்சியில் இருந்தவர்கள்தான். கோவை தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் குண்டுவெடிப்பின் காரணமாக, 58 உயிர்களை இழந்தோம். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த கூட்டம் மத ரீதியான கூட்டம் இல்லை, தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டம். தமிழ்நாடு இன்னும் ஆபத்தில் இருந்து தப்பவில்லை.
கடந்த 2022ஆம் ஆண்டு, கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக நடந்த தற்கொலை படை தாக்குதலை தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரித்து, பலரை கைது செய்து, தீவிரவாதத் தாக்குதல் என்பதை உறுதி செய்த பிறகும், சிலிண்டர் வெடிப்பு என்று கூறி வருகின்றனர். பல்வேறு வெடிபொருள்கள், ஐஎஸ்ஐஎஸ் (ISIS) தொடர்பு, 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் என அனைத்தும் வெளிப்பட்ட பிறகும், எதற்காக சிலிண்டர் வெடிப்பு என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக?
திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, நாடு முழுவதும் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து வந்ததை நாம் அறிவோம். நூற்றுக்கணக்கான பொதுமக்கள், நாடு முழுவதும் தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பலியாகினர். திமுகவைப் போலவே, பங்காளிக் கட்சியும், தீவிரவாத இயக்கமான PFI இயக்கத்துடன் தொடர்புடைய SDPI உடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கின்றனர்” இவ்வாறு பேசினார்.
பின்னர், மேடையில் இருந்து இறங்கிய அண்ணாமலைக்கு, நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பாசிமணி மாலை அணிவித்தனர். கூட்டநெரிசலின் காரணமாக கீழே விழுந்த முதியவரை, அண்ணாமலை தூக்கி விட்டார். இதனையடுத்து, முதியவருக்கு அடிப்பட்ட நிலையில், அவரை பாஜகவினர் மருந்துக் கடைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: எம்.எஸ்.சுவாமிநாதன் வாழும் போதே பாரத ரத்னா வழங்கியிருக்க வேண்டும் - சௌமியா சுவாமிநாதன்