திருப்பூர்: பல்லடம் மாதப்பூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிற என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா, வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார்.
இதற்கான பணிகள் பல்லடம் மாதப்பூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இக்கூட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதை, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று (பிப்.23) நேரில் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது, “என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிகிறார். இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் செய்துள்ளனர். இந்த கூட்டம் மிகப்பெரிய எழுச்சி விழாவாக இருக்கும். 234 தொகுதிகளில் நடைபெற்று முடிந்த இந்த யாத்திரையானது, தமிழகத்தின் அரசியல் மாற்றங்களில் மிக முக்கியமான மாற்றமாக இருக்கும்.
1947ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் எத்தனையோ அரசியல் மாற்றம் நிகழ்ந்திருந்தாலும், இந்த கூட்டத்திற்குப் பிறகு முக்கிய அரசியல் மாற்றம் நிகழும். பிரதமர் பிப்ரவரி 27, 28 ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் இருக்கின்றார். தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் வருகை புரியவுள்ளனர். கோவை நாடாளுமன்றத் தொகுதியில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
பல்லடத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா நடைபெறுவதற்கான காரணம் என்ன? பங்காரு அடிகளார் இறைவனடி சேர்ந்த பொழுது, திருப்பூரில் நடக்கவிருந்த யாத்திரையானது ஒத்தி வைக்கப்பட்டது. திருப்பூரில் இறுதியாக யாத்திரையின் நிறைவு விழா நடக்க வேண்டும் என்று திருப்பூரில் உள்ள இரண்டு தொகுதி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளுக்கு வருகை புரிந்துள்ளார். ஆனால், கோவை பகுதிக்கு அவர் வந்ததில்லை.
குறிப்பாக, திருப்பூர் பகுதி மையப்பகுதி என்பதால், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவதற்கு ஏதுவாக இருக்கும். கோவை மற்றும் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே நெருங்கிய ரத்த பந்தம் உள்ளது. திருப்பூரில் நடைபெறும் இந்த கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.
தேர்தலுக்கு முன்பாகவும், பிறகும் பிரதமரின் வருகை தமிழகத்தில் தொடர்ச்சியாக இருக்கும். சரித்திரத்தில் இது போன்ற நிகழ்வு நடந்திருக்காது என்பதற்குச் சான்றாக இந்த நிகழ்வு அமைய இருக்கிறது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2026 அதிமுக ஆண்டு என்பதை உறுதிப்படுத்துவோம் - ஜெயலலிதா பிறந்தநாளில் எடப்பாடி பழனிசாமி சூளுரை!