கோயம்புத்தூர்: கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளிவந்த தேர்தல் முடிவுகளின்படி, மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்றிருந்தார். இவர் டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு திரும்புவதாக வந்த தகவல் வெளியான நிலையில், அண்ணாமலையை பேட்டி எடுப்பதற்காக செய்தியாளர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
இந்நிலையில், கோவை வந்தடைந்த அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பை தவிர்த்த அண்ணாமலை, பின்தொடர்ந்து வந்த செய்தியாளர்களிடம், “இனி என் வாழ்வில் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்க மாட்டேன், நான் மட்டுமல்ல பாஜகவில் யாரும் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்க மாட்டார்கள்.
செய்தியாளர்கள் சந்திப்பு எல்லாம் முறையாக கட்சி அலுவலகத்தில் தான் நடைபெற வேண்டும். இனி செய்தியாளர்களுக்கு பாத்ரூம் போயி வரும் போதெல்லாம் பிரஸ்மீட் இல்லை. மேலும், செய்தியாளர் சந்திப்பு குறித்து மாவட்ட பா.ஜ.க தலைவர் முறையாக தகவலை செய்தியாளர்களுக்கு தருவார்” என தெரிவித்துச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து, அண்ணாமலை விமான நிலையத்தில் இருந்து சென்ற சிறிது நேரத்தில் பாஜக கோவை மாவட்ட நிர்வாகம் நாளை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் அழைப்புகளை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணி அமைய ராகுல் காந்தியின் அணுகுமுறை துணையாக இருந்தது