ராணிப்பேட்டை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் மேற்கொண்டு வரும் யாத்திரையின் ஒரு பகுதியாக, நேற்று (பிப்.5) ஆற்காடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். இதில், ஜீவானந்தம் சாலையில் தொடங்கி, அண்ணா சிலை வழியாகச் சென்று ஆற்காடு பேருந்து நிலையத்தில் தனது நடைபயணத்தை முடித்துக் கொண்டார்.
அதன் பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து பேசிய அண்ணாமலை, "நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசியபோது, 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி, இந்தியா மூன்றாவது பொருளாதார நாடக வருவதற்கு இன்னும் 30 ஆண்டுகள் தேவைப்படும் என சொன்னது. ஆனால், பாரதிய ஜனதாவின் 9 ஆண்டு கால ஆட்சியில் 5வது பொருளாதார நாடக இந்தியா மாறி இருக்கிறது.
மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து, 2028ஆம் ஆண்டில் மூன்றாவது பொருளாதார நாடக இந்தியா மாறி இருக்கும் என பிரதமர் கூறியுள்ளார். பிரதமரின் கனவு மிகப்பெரியது. இந்த நாட்டை வல்லரசாகவும், ஏழை இல்லாத நாடகவும் மாற்ற வேண்டும் என கனவு காண்கிறார்.
இதையும் படிங்க: “திமுக எப்படியோ அப்படித்தான் எடப்பாடி பழனிசாமி” - டிடிவி தினகரன் கூறியது என்ன?
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சியில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவராக அமர்த்தி அழகு பார்த்துள்ளது. அதேபோல், பாரதிய ஜனதா ஆட்சியில் 75 அமைச்சர்கள் உள்ள அமைச்சரவையில், 12 அமைச்சர்கள் பட்டியலினத்தைச் சார்ந்தவர்கள், 8 அமைச்சர்கள் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள். திராவிட கழக ஆட்சியில் 35 அமைச்சர்களில், வெறும் 3 அமைச்சர்கள் மட்டுமே பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்களாக உள்ளனர். இதில் திமுக, சமூகநீதி பற்றி பேசுகிறது" என விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “ஆற்காடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நகரியில் இருந்து திண்டிவனம் வரையிலான ரயில் பாதைக்கு, கடந்த பட்ஜெட்டில் 350 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அதன் பணிகள் விரைவில் முடிக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.
மேலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலின் முடிவில், 400 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேலாக வெற்றி பெற்று, மோடி பிரதமராக ஆட்சி அமைப்பார். மேலும், அரக்கோணம் தொகுதியில் பாஜக தரப்பில் யார் வேட்பாளராக போட்டியிட்டாலும், அவரை மோடியாக எண்ணி வாக்களித்து ஆதரவு தர வேண்டும்” என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: "மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும்" - மக்களவையில் பிரதமர் மோடி!