ஈரோடு: ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜயகுமாரை ஆதரித்து சித்தோட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 400 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அந்த அளவிற்கு வலிமையான பிரதமர் வந்து அமர்ந்தால்தான் வளமான தமிழகத்தை உருவாக்க முடியும். திமுகவிற்கு ஓட்டுப் போட்டு நாம் எந்த சாதனையும் செய்யப்போவதில்லை.
இந்த 2024 தேர்தல் ஒரு சரித்திர தேர்தல். ஏன் என்றால், யார் பிரதமராகப் போகிறார் என்பது தெரிந்து நாம் ஓட்டுப் போடப் போகிறோம். தமிழக முதல்வர் பொய் சொல்கிறார், எழுதிக் கொடுத்த சீட்டைத்தான் படிக்கிறார். திமுக காரர்கள் மக்களை பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இந்த முறை மனிதரைப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.
10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்து விட்டுத் தான் மீண்டும் வாய்ப்பு கேட்கிறோம். இது வரை இந்தியா பார்க்காத அரசை நாம் பிரதமர் மோடி கொடுத்திருக்கிறார். நாட்டு வளர்ச்சிக்கும், தனி மனிதனின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அடிப்படை அறிவு கூட கிடையாது. பிரதமர் மோடியைப் பொருத்தவரை தமிழகத்திற்கு 16 லட்சம் கோடி கொடுத்திருக்கிறார். இந்தியாவில் வேற எந்த மாநிலத்திற்கும் வழங்காத அளவிற்குத் தமிழ்நாட்டில் நிதி கொடுக்கப்பட்டுள்ளது.
அது நேரடியாக வங்கிக் கணக்கின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் மூலமாகக் கொடுக்கப்படவில்லை. ஒரு விவசாயிக்கு 17 தவணைகளாக இதுவரை 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மகளிர் கேஸ் மானியம், மருத்துவ காப்பீடு என்ன எண்ணற்ற திட்டங்களைப் பிரதமர் வழங்கி வருகிறார்.
பிரதமரை, உதயநிதி 29 பைசா மோடி என்று கூறினால், கஞ்சா உதயநிதி என்று சொல்லுங்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் மூளை முடுக்கெல்லாம் கஞ்சா. தமிழ்நாடு வளர்ந்திருக்கிறதோ இல்லையோ கஞ்சா விற்பனை வளர்ந்திருக்கிறது" என்று விமர்சித்துப் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: "பிரதமர் மோடிக்கு செலெக்ட்டிவ் அமினேஷியா" - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சாடல்!