சென்னை: சேத்துப்பட்டில் உள்ள சின்மயா மிஷன் சனாதன சேவா சங்கத்தின் "உபநிஷத் கங்கா" 52 வார தொடரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர், என்.கோபாலசாமி மற்றும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வெளியிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "நாளை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மதுரை மேலூர், அரிட்டாபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறார். மக்கள் அவருக்கு நன்றி தெரிவிக்க உள்ளனர். மாநில அரசு முறையான தகவல்களை கொடுக்காத நிலையிலும், மக்களின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துள்ளது. இதை பல அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதால் தான் இது நடந்தது என முதலமைச்சர் சொல்கிறார். நீங்கள் எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றி இதுவரை எத்தனை நடந்திருக்கிறது? கடிதம் எழுதியதால் தான் நடந்தது என்கிறார் முதல்வர், நீங்கள் எத்தனை கடிதம் எழுதி அதில் எத்தனை நடந்துள்ளது? என கேள்வி எழுப்பினார். டங்ஸ்டன் சுரங்கம் ரத்துக்கு ஒரே காரணம், முழு முதற்காரணம் பிரதமர் மோடி மட்டும் தான். நாளை மதுரைக்கு சென்று மக்களை சந்திக்க இருக்கிறோம்" என்றார்.
ஈ.சி.ஆர்.யில் பெண்கள் விரட்டப்பட்ட சம்பவம் தொடர்பான கேள்விக்கு, "நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் அது. நானும் ஈசிஆர் பகுதியில் தான் இருக்கிறேன். ஈசிஆர் பகுதியில் எப்போதும் முறையான பாதுகாப்பு எப்போதும் இருக்காது. திமுக கொடி அணிந்த வாகனத்தில் வந்த இளைஞர்கள், பெண்களிடம் மோசமாக நடந்து கொள்ளும் அந்த வீடியோ தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்பதற்கு இது உதாரணம். பல உதாரணங்கள் இருந்தும் தினம் தினம் உதாரணங்கள் வருகிறது.
ஒரு பெண் நள்ளிரவில் சுதந்திரமாக என்று நடந்து செல்கிறார்களோ அன்று தான் நாட்டிற்கு முழு சுதந்திரம் என மகாத்மா காந்தி கூறினார். இந்தியா முழுவதும் முழு சுதந்திரம் கிடைத்ததாக பார்க்கிறேன், ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் முழு சுதந்திரம் தற்போது வரை கிடைக்கவில்லை. நள்ளிரவில் சென்றாலும், பகலில் சென்றாலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் இருக்கிறது.
காவல்துறைக்கு போதுமான அளவு ரோந்து வாகனங்களையும், இருசக்கர வாகனங்களையும் வாங்கி கொடுக்க வேண்டும். இரவில் ரோந்து போக வேண்டும். காவல்துறையினருக்கு எந்தவித உபகரணங்களும் கொடுக்காமல், காவல் நிலையங்களையும் அதிகப்படுத்தாமல், போதுமான அளவு ஆட்களையும் பணிக்கு எடுக்காமல் திராவிட மாடல் என்று சொல்லித் திரிகிறது திமுக அரசு.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த ஒரு ஆணியும், துரும்பையும் கிள்ளி போடாமல் இருக்கிறார்கள் மக்கள் இதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். செய்தியாளர்களின் தொலைபேசியை வாங்கி இவர்கள் தான் தகவல்களை வெளியிட்டார்கள் என்ற வாதத்திற்கு கொண்டு செல்வதை ஒரு முட்டாள்தனமாக தான் நான் பார்க்கிறேன்.
ஒரு செய்தியாளர் பல விதங்களில் சோர்ஸ் வைத்திருப்பார்கள். செய்தியாளரின் முக்கிய வேலையே செய்தியை வெளிக்கொண்டு வருவது தான். செய்தியைக் கொண்டு வருபவர்களை நாம் எப்பொழுதும் பாதிப்புக்கு உள்ளாக்க கூடாது. ஒரு செய்தியாளரை இது போன்ற அச்சுறுத்தினால் தமிழ்நாட்டில் நடக்கும் எந்த விதமான செய்திகளையும் வெளிக் கொண்டு வர செய்தியாளர்கள் பயப்படுவார்கள். செய்தியாளர்களை அச்சுறுத்தி, பயமுறுத்தி, அவர்களின் தொலைபேசியை வாங்கி பார்ப்பது அச்சு ஊடகங்களுக்கு எதிரான திமுகவின் மனோபாவத்தை காட்டுகிறது" என்றார்.
7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என்று முதலமைச்சர் கூறியது தொடர்பான கேள்விக்கு, "முதலமைச்சர் பகல் கனவில் இருக்கிறார் 92 அரசு பேருந்துகளில், 300 ரூபாய் பணம் கொடுத்து, மதிய உணவு கொடுத்து மக்களை அழைத்து வந்து அரிட்டாப்பட்டியில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துகிறார்கள். அரசு பேருந்துகளில் மக்களை அழைத்து வந்தா பாராட்டு விழா நடத்துவீர்கள்? மக்களே அவர்களாக வந்து உட்கார வேண்டாமா?
நாளை மத்திய அமைச்சர் கிஷன் பங்கேற்கும் பாராட்டு விழாவை பாருங்கள். மக்கள் அவர்களாகவே பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நாடக கம்பெனி போல் தான் திமுக செயல்படுகிறது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு எந்த சாத்திய கூறும் கிடையாது.
ஆளுநர் இதுபோன்று நடந்து கொண்டால் தான் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று முதலமைச்சர் கூறினார். இந்த ஆளுநரை தயவு செய்து மாற்றி விடாதீர்கள் என்று கூறிய முதலமைச்சர், இன்று திமுக எம்பிக்கள் கூட்டத்தில் ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், ஆளுநரை பார்த்து பயப்படுகிறார்கள் என்று அர்த்தமா? இல்லை இதற்கு முன்பு ஆளுநர் பற்றி அவர் கூறிய கருத்துக்கள் தவறு என்பது அர்த்தமா? எனவே இரட்டை வேடத்தை போடும் திமுகவை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஆளுநர் சொல்கிறார். ஈசிஆரில் நடந்த சம்பவத்திலும் அதைத்தான் பார்த்தோம். ஆளுநர் சொல்பவற்றிற்கு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பதில் சொல்லிப்பழகுங்கள். கோழைகள் தான் போஸ்டர் ஓட்டுவார்கள். அரசியல் கோழைகள் தான் தனிப்பட்ட தாக்குதல்களை நடத்துவார்கள் நேரடியாக ஆளுநரை எதிர்கொள்ள வேண்டும் என்றால் தரவுகளின் அடிப்படையில் பதில் சொல்ல வேண்டும்.
முதல்வர் ஐ ஜி, டி ஐ ஜி.களை அழைத்து கூட்டங்கள் நடத்தி ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு குற்ற சம்பவங்கள் நடந்துள்ளது என்பதை ஆராய்ந்து புள்ளி விவரங்கள் எடுத்து வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். குற்ற சம்பவங்கள் எல்லாமே உயர்ந்து இருக்கிறது. அதனால் தான் ஐ.ஜி., டி.ஐ.ஜி.களோடு முதலமைச்சர் ஆலோசனைக் கூட்டங்கள் போடுவதில்லை. தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள், பட்டியலின சமூகத்தினர் மீதான குற்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளது என்பதுதான் உண்மை.
பெண்கள் குழந்தைகள் மீதான குற்ற சம்பவங்களுக்கு கடும் நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் மார்தட்டிக் கொள்கிறார். ஊடக நண்பர்களையும் மிரட்டும் அளவிற்கு திமுக ஆட்சியின் அவலத்தை பார்க்கிறேன். நாளை மறுநாள் வெங்கையா நாயுடுவின் இல்ல திருமண விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளார்.
இதையும் படிங்க: 'தனியார் கல்லூரிகளில் இலவச கல்வி': மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் இருக்கும் எதிர்பார்ப்பு! - BUDGET 2025 EXPECTATIONS
காவல்துறையின் கையை கட்டி போட்டுவிட்டால் எப்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். சரியான முறையில் விசாரணைகள் நடைபெறுவதில்லை. வெறும் சட்டத்தை மட்டும் கொண்டு வந்து என்ன பயன்? எனவே காவல்துறைக்கு தேவையான உபகரணங்களை எல்லாம் கொடுங்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்"
இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.