விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "பாமக தலைவரான அன்புமணி ராமதாஸ், 35 வயதில் மத்திய அமைச்சராகி புகையிலை ஒழிப்புக்கு பாடுபட்டவர். 2010 முதல் இடைத்தோ்தலில் போட்டியிடுவது இல்லை என்ற முடிவில் இருந்த பாமக, தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு இடைத்தோ்தலில் போட்டியிடுகிறது. இதற்குக் காரணம் தமிழ்நாட்டில் நடக்கக் கூடாத ஆட்சி நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி இடைத்தோ்தல் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது, திமுக அதிகார பலத்தை வைத்து கொண்டு ஜனநாயகம் புதைத்து வருகிறது. திமுக மற்றும் காங்கிரஸின் வாக்கு வங்கி தமிழ்நாட்டில் படிப்படியாகக் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் மாற்று அரசியலை கொண்டு வரும் சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உள்ளது. இந்த வேளையில், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் மாற்றத்திற்கான அடித்தளம் அமைக்கும் தோ்தலாக இருக்க வேண்டும். அதிமுகவைச் சோ்ந்தவா்கள் பாமக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவா்கள் யாரும் துதிபாடுவது கிடையாது. எனவே, கூட்டணிக் கட்சியினா் மன திடத்துடன் தோ்தலை எதிா்கொள்ள வேண்டும். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவதும், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவதும் உறுதி.
திமுக அரசு கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறது. பெண்களுக்கு மகளிா் உரிமைத் தொகையை கொடுத்து, அதனை டாஸ்மாக் மூலம் பறித்துக் கொள்ளும் அரசாகத்தான் திமுக இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவா்களில் 65 போ் உயிரிழந்துள்ள நிலையில், பலா் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையிலும் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு சென்று மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறவில்லை, ஏனென்றால் அவருக்கு மக்களை பற்றி எந்தக் கவலையும் இல்லை. இதற்கு தமிழ்நாடு மக்கள் வாக்குகள் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தோ்தல் பொது நலத்திற்கும், சுயநலத்திற்கும் நடைபெறுகின்ற தோ்தல் என்பதை மக்கள் உணா்ந்து பாமக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்.
பி.ஏ படிப்பை நாய் கூட படிக்கும் என்று ஆர்.எஸ் பாரதி கூறுகிறார். மக்களை நாய் என கூறும் அளவிற்கு திமுக ஆட்சி நடத்தி வருகிறது. தொடர்ந்து மக்களை அவதூறாக பேசி வரும் அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் கண்டிக்காமல் அமைதி காத்து வருகிறார் என தெரியவில்லை.
ஒருவர் ஓசி என்கிறார், மற்றொருவர் நாய் கூட படிக்கும் என்கிறார். மேலும் திமுக அமைச்சர் ஒருவர் தமிழ்நாடு டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமைச்சர்கள் கோடி கோடியாக பணத்தைக் கொட்டி வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர். ஈரோடு இடைத்தேர்தலில் பட்டித் தொட்டியாக வாக்காளர்களை அடைத்து வைத்திருந்தனர். ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இங்கே பட்டியும் வேலை செய்யாது, தொட்டியும் வேலை செய்யாது. ஏனென்றால் இது ராமதாஸின் பூர்வீகமான பூமி" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'சின்னம் வரையக்கூட ஆளில்லாத பாஜக..திமுகவின் வெற்றிக்கு உழைக்கும் விசிக!' - திருமாவளவன் பேச்சு - Vikravandi by election