சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் பதவியில் இருந்து நாளை ஓய்வு பெறக்கூடிய நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "10 நாட்களுக்கு முன்னர் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்கள் நியமனம் மோசடியாக நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 295 பொறியியல் கல்லூரிகளில் 700 ஆசிரியர்கள் போலியாக பல கல்லூரிகளில் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 295 பொறியியல் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில், 20 சதவீதம் கல்லூரிகள் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளது. மேலும், 80 சதவீத கல்லூரி விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது. அதன் அடிப்படையில் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்க மேலும் 10 நாட்கள் கூடுதல் அவகாசம் அந்த கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை பொருத்தவரையில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழகம் செயல்படும். முறைகேடு உறுதியானால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்த கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்வது, கல்லூரிக்கு அபராதம் விதிப்பது போன்றவை குறித்து முடிவெடுக்கப்படும்.
அதே வேளையில் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் கல்லூரிகளில் பணியாற்ற முடியாத அளவுக்கு தடை செய்யப்படுவார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றாலும், விசாரணை செய்ய அமைக்கப்பட்ட குழு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளும். அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் கன்வினர் கமிட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வரக்கூடிய சூழலில் மாணவர்களின் செல்போன் எண்கள் போன்ற விபரங்களை எடுத்து தனியார் பொறியியல் கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளில் சேர வேண்டும் நல்ல கல்லூரி என்று மாணவர்களிடம் கோரி கலந்தாய்வில் தேர்வு செய்ய வைக்கிறார்கள் என்ற புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.
ஆகவே, மாணவர்கள் இதில் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். குறிப்பாக கிராமப்புற மாணவர்களை குறிவைத்து இது போன்ற கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்கள் தரமான கல்லூரிகளை அறிந்து அவற்றை கலந்தாய்வில் தேர்வு செய்ய வேண்டும்.
சில கல்லூரிகள் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் விளக்கு அளிப்பதாக கூறி சேர்த்துவிட்டு பின்னர் பணத்தை கட்ட வேண்டும் என்று கூறும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. ஆகவே முதலில் நல்ல கல்லூரியை ரேங்க் அடிப்படையில் தேர்வு செய்து படிப்பது தான் சிறந்ததாக அமையும். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
கம்ப்யூட்டர் தொடர்பான படிப்புகள் முதலில் அதிக ஊதியம் தரக்கூடியதாக இருக்கின்றன. ஆனால் இப்படிப்பட்ட படிப்புகளில் முதலில் ஊதியம் அதிகமாக இருந்தாலும் 30 வயதிற்கு பிறகு வேலை செய்வது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
அதே நேரத்தில் மெக்கானிக்கல், சிவில் போன்ற படிப்புகளில் முதலில் ஊதியம் குறைவாக இருந்தாலும் அனுபவம் அதிகரிக்க, அதிகரிக்க ஊதியம் அதிகரிக்கும். தொடர்ந்து இதில் 60 ஆண்டுகள் வரையில் பணியாற்றும் வாய்ப்பு இருக்கும்.
ஆகவே மாணவர்கள் முதலில் அதிக ஊதியம் கிடைக்கும் படிப்புகளை தேர்வு செய்வதை விட தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்புள்ள சிவில், மெக்கானிக்கல் போன்ற படிப்புகளை தேர்வு செய்து படிப்பது சிறந்ததாக இருக்கும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றிய காலத்தில் ஆராய்ச்சிக்காக 17 மையங்களை உருவாக்கி உள்ளோம். பேராசிரியர்களை நியமித்துள்ளோம். அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்து அதிகளவில் நிதி வருவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் வரும் காலத்தில் ஐஐடிக்கு முன்னாள் மாணவர்கள் நிதி அளிப்பது போல் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் நிதி வரும்.
அண்ணா பல்கலைக்கழகம் பல்வேறு படிப்புகளை இணைய வழியாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், யோகா உள்ளிட்ட படிப்புகள் இணைய வழியில் வழங்கப்பட உள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்தின் தரம் உலக அளவில் தெரிவதற்கு வாய்ப்புள்ளதாக" கூறினார்.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் கசிவு! தனியார் கல்லூரிகளில் சேர வைக்க முயற்சியா? - TNEA Students data leaked