சென்னை: ஃபெஞ்சல் புயல் பிற்பகலில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து முன்னச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஃபெஞ்சல் (FENGAL) புயல் 30.11.2024 அன்று கரையைக் கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு'கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தேவைக்கேற்ப முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (Work From Home) : தகவல் தொழிநுட்ப நிறுவனர்கள் தங்களது பணியாளர்களை நாளை (30.11.2024) வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பொதுப் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம் : 30.11.2024 அன்று பிற்பகல் புயல் கரையைக் கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலையில் பொதுப் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.
பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் : 30.11.2024 அன்று புயல் கரையைக் கடக்கும் போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர, இதர பணிகளுக்காக வெளியில் வருவதை கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, கடற்கரை பொழுதுபோக்கு பூங்காங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொள்கிறது.' என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி ரத்து: இதனிடையே, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை (நவ.30) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும், பட்டமளிப்பு விழா வழக்கம்போல் நடைபெறும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு : அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகலில் கரையை கடக்கிறது - சென்னைக்கு ரெட் அலர்ட்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மீனவர்களுக்கான எச்சரிக்கை : சென்னையில் இருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள பெஞ்சல் புயல் 13 கிலோ மீட்டர் வேகத்தில் தரையை பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.
புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி 75 கிலோ மீட்டர் வேகத்திலும், டிச 1ம் தேதி 70 கிலோ மீட்டர் வேகத்திலும், டிச 2ம் தேதி 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூரைகாற்று வீசும் என்பதால், சென்னை மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
தொடர்ந்து 3 நாட்களுக்கு புயலின் தாக்கம் இருப்பதால் டிச 2ம் தேதி வரை விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், மறு உத்தரவு வரும் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படை : புயல் காரணமாக செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு 30 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் செல்கின்றனர். இதேபோன்று, நாகப்பட்டினம் கடற்கரை பகுதியில் உள்ள மீனவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் பணிகள் குறித்தும் மழை மற்றும் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்தும் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்