சென்னை: சென்னை பெசன்ட் நகர் ஓடக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (22), இவர் பெயிண்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று பெசன்ட் நகர் கலாக்ஷேத்ரா காலனி வரதராஜ் சாலை நடைபாதை அருகே மது போதையில் படுத்து உறங்கியுள்ளார்.
அப்போது அவ்வழியாக சென்ற கார் சாலை ஓரம் மது போதையில் படுத்திருந்த சூர்யாவின் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில், படுகாயமடைந்த சூர்யாவை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற பெண்கள் யார் என அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வாகன எண்ணை வைத்து தீவிரமாகத் தேடியும், விசாரித்தும் வந்தனர்.
இந்த விசாரணையில், விபத்தை ஏற்படுத்தியது ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ராஜ்யசபா எம்பியான பீடா மஸ்தான் ராவின் மகள் பீடா மாதுரி என்பது தெரிய வந்தது. இவர் சென்னை பெசன்ட் நகரில் வசித்துக் கொண்டு, பாண்டிச்சேரியில் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருவதும் தெரிய வந்தது. விசாரணைக்கு ஆஜராகுமாறு பீடா மாதுரியை போலீசார் அழைத்தனர்.
பின்னர் விசாரணைக்கு ஆஜரான பீடா மாதுரி மீது அஜாக்கிரதையாக வாகனத்தை ஒட்டி விபத்தை விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பீடா மாதுரியிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி, காவல்நிலைய ஜாமீனில் வெளியே விட்டனர்.
இதையறிந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் கூறுகையில்,"நேற்று முதல் தங்களை சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து அலைக்கழித்து வருவதாகவும், விபத்து ஏற்படுத்திய ஆந்திரா எம்பியின் மகளைப் பாதுகாப்புடன் அழைத்து வந்து திருப்பி அனுப்பிய உள்ளனர்.
இரண்டு தினங்களாகியும், இதுவரை சூர்யாவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யாமல் மருத்துவமனையில் இருப்பதாகவும், காவல்துறையினர் தங்களுக்கு சாதகமாக இல்லாமல் ஆந்திரா எம்பி மகளுக்கு சாதகமாக இருப்பதாகக் குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க: விடைத்தாள் மறுக்கூட்டல், மறுமதிப்பீடு: 2,328 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம்! - HSC REVALUATION