ஓசூர்: ஓசூர் அப்பாவு நகரைச் சேர்ந்தவர் அருளானந்தன் (42). இவர் ஓட்டுநர் வேலை செய்து வருகிறார். இவர் தனக்குச் சொந்தமான ஈகோ மாடல் காரை, அப்பாவு நகரில் சாலையோரத்தில் விட்டுச் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட ஒருவர், அந்த காரை திருடிச் சென்றுள்ளார்.
கார் காணாமல் போனதை அறிந்த அருளானந்தன், இதுகுறித்து ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் சோதனை செய்தபோது, இளைஞர் ஒருவர் காரை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து, போலீசார் அந்த கார் சென்ற இடங்களில் இருந்து சிசிடிவி கேமராக்களை தொடர்ந்து கண்காணித்து சென்றுள்ளனர். இந்த பணி தொடர்ச்சியாக ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி நகர் வரை சென்றுள்ளது. மதனப்பள்ளியில் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த ஊரைச் சேர்ந்த ஷேக் சைப் அலி (32) என்பவர் அருளானந்தனின் காரை திருடி அங்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.
மேலும், காரை திருடிய ஷேக் சைப் அலி ஒரு பொறியாளர் என்பதும், அவர் ஜெர்மன் நாட்டில் பொறியாளர் படிப்பு படித்து விட்டு வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், மதனப்பள்ளி கிராமத்தில் வாழும் பலர் திருட்டு தொழில்களில் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் தெரிய வந்தது.
அந்த வகையில், அந்த ஊரைச் சேர்ந்த ஷேக் சைப் அலியும் காரை திருடி உள்ளார். தொடர்ந்து, போலீசார் ஷேக் சைப் அலியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடமிருந்து காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: 5 நாட்கள் பயணம் செய்து ரயிலில் வந்திறங்கிய 1,600 கிலோ கெட்டுப்போன இறைச்சி.. சென்னையில் அதிர்ச்சி!