ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் 'தமிழகத்தின் வளர்ச்சிக்கான அரசியல்' என்ற தலைப்பில் பாமக பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "தமிழ்நாட்டில் பட்டியலின மக்களையும், வன்னிய மக்களையும் பாதுகாக்கவே மது ஒழிப்பு போராட்டத்தை ராமதாஸ் நடத்தி வருகிறார். ஆனால், தமிழ்நாடு குடிகார நாடு, கஞ்சா நாடு, கொலைகார நாடாக மாறியுள்ளது. இது தான் திராவிட மாடல் என கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சி பழைய அம்பாசிடர் மாடல் என குறிப்பிட்ட அவர், மது ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் விசிக நடத்திய மாநாடு, வெறும் நாடகம் எனவும் மதுக்கடைகளை மூட மோடி தான் உத்தரவிட வேண்டும் என கூறுவது தவறான விளக்கம், ஏற்கெனவே அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சிக்கு வந்த சமயத்திலும் மதுக்கடைகளை மூடும் போது மோடி சொல்லி தான் மூடினார்களா? என அன்புமணி கேள்வி எழுப்பினார்.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் பத்திரிகையாளர் சந்திப்பு.! pic.twitter.com/ODCcVD4Yv1
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 7, 2024
இதையும் படிங்க: "2026-ல் கூட்டணி ஆட்சி தான் அமையும்" - அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை!
தொடர்ந்து, தமிழ்நாட்டில் திமுக பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் 6 ஆயிரம் கொலைகள், 50 ஆயிரம் கொள்ளைகள், 20 விசாரணை கைதிகள் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்களைக் கூறிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று உள்ளதா? என கேள்வி எழுப்பினார். தற்போது தமிழ்நாட்டில் அமெரிக்காவுக்கு நிகராக அனைத்து கஞ்சா பொருட்களும் புழக்கத்தில் உள்ளதாகவும், இதனால் இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. அதைப்பற்றி முதலமைச்சருக்கு கவலையில்லை, ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து கவலைப்படுகிறார்.
திமுகவிற்கும், சமூகநீதிக்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை. தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், சமூகநீதிக்கும் கூட எள்ளளவும் சம்பந்தம் இல்லை. அதேபோல, திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகக் கூறுகிறார்கள், அதுபற்றி என்னுடன் மேடையில் விவாதிக்கத் தயாரா? என சவால் விடுத்தார்.
அனைத்து வரிகளும், கட்டணங்களும் உயர்த்தி மக்களை பிழிந்து எடுத்து ஒரு மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டுள்ளது. மின் கட்டணத்தை இந்த 2 ஆண்டுக் காலத்தில் மூன்று முறை உயர்த்தியுள்ளார்கள். இளைஞர்களே எங்களுக்கு ஆதரவு கொடுத்தீர்கள் என்றால் நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
எனக்கு மனதுக்குள் மிகப்பெரிய கோபம் உள்ளது. விவசாய நிலங்களை கையகப்படுத்தி மிரட்டி அரசாங்கம் பிடுங்கிக் கொள்கிறது. அதை பெரிய பண முதலாளியிடம் கொடுக்கிறார்கள். வருங்கால சந்ததியினரை காக்க வேண்டும் என்றால் மாற்றம் உங்கள் மனதில் வர வேண்டும். நியாயமானவர்களைத் தேர்வு செய்யுங்கள். கொலைகாரன் கொள்ளைக்காரன்களை தேர்வு செய்ய வேண்டாம்.
நீங்கள் முடிவு செய்யுங்கள், திமுகவிற்கு நீங்கள் மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்தீர்கள். அதை வைத்து தமிழகத்திற்கு நன்மை செய்திருக்கலாம். ஆனால், எதையும் செய்யவில்லை. இதை அவரை சுற்றி உள்ள ஒரு ஐந்து அமைச்சர்கள் பயன்படுத்திக் கொண்டு ஓகோ என உள்ளனர். இதை மாற்ற வேண்டுமென்றால் நீங்கள் பாமகவிற்கு ஆதரவளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்