சென்னை: வன்னியர்கள் 10.5% இட ஒதுக்கீடு சர்ச்சை தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வன்னியர்களின் 10.5 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு கிடைத்துக் கொண்டிருக்கிறது என செய்தி வந்து கொண்டிருக்கிறது. இதில் தமிழக அரசு என்று மட்டும் தான் வரவில்லை. ஊடகங்கள் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபர்களிடம் கண்டிப்பாக விசாரிக்க வேண்டும். தவறான தகவலை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், இது சாதி பிரச்சனை கிடையாது, சமூக நீதி தொடர்பான பிரச்சனை. தமிழ்நாட்டில் பட்டியலினம் மற்றும் வன்னியர் சமுதாயம் இரண்டும் தான் மக்கள் தொகையில் அதிகம் உள்ள சமுதாயம். அதேவேளையில் இவர்கள் அடிமட்டத்தில் உள்ளவர்கள், கூலித் தொழில் பார்ப்பவர்கள். இவை இரண்டும் முன்னேறினால் தான் தமிழகம் முன்னேறும், இவற்றை முன்னேற்றுவதை விட்டுவிட்டு பொய்யான தரவுகளைத் தமிழக அரசு கையில் எடுத்துள்ளது.
அதாவது மொத்த தமிழ்நாட்டில் உள்ள எம்பிசி பிரிவில் உள்ள 115 சமுதாயத்தில் 114 சமுதாயம் 6.7 விழுக்காடு, வன்னியர் மட்டும் 14.1. இதில் புள்ளி விவரங்களை அரசிடம் பல வருடங்களாகத் தொடர்ந்து கேட்டு வருகின்றோம். ஆனால் அரசு தரவில்லை. நீதிமன்றம் சென்றும் தரவில்லை. தற்போது ஆர்டிஐ எனக் கூறி இவர்களே ஒரு தரவுகளை கொடுத்துள்ளனர். அதிலும், முழு தரவுகளும் வெளியாகவில்லை. குறிப்பிட்ட தரவு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இது அரசியல் காரணத்திற்கான செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய மோசடி. சமூக நீதிக்கு மு.க.ஸ்டாலின் செய்துள்ள மிகப்பெரிய வன்மமான செயல்.
நாங்கள் கேட்டது குரூப் 1, 2, 3, 4 ஆகியவற்றின் தரவுகள். இதுவரை தமிழக அரசு குரூப் 1 மற்றும் 2 தொடர்பாக தரவுகள் கொடுத்ததே கிடையாது. குரூப் 4 தரவுகளை மட்டுமே வெளியிட்டுள்ளது. அதுவும் சில தரவுகள் 2018ல் இருந்து தருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் தரவுகளை கொடுங்கள். வன்னியர் சமுதாயத்துக்கு மட்டுமில்லை அனைத்து சமுதாயத்துக்கும் கொடுங்கள். ஏனென்றால் முடிதிருத்தும் சமுதாயம், சலவைத் தொழில் சமுதாயம் உள்ளிட்ட 30 சமுதாயத்துக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் மொத்தம் 109 உயர் காவல்துறை அதிகாரிகள் உள்ளனர். அதில் ஒரே ஒருவர் மட்டும்தான் வன்னியர் உள்ளார். இதுதான் சமூகநீதியா? இதற்காகவா 25 உயிரைவிட்டனர். இதில் 10 சதவீதம் வந்துவிட்டதா? கடந்த 35 வருடமாக நடக்கும் இட ஒதுக்கீட்டில், அன்றே அனைவருக்கு வேலை கிடைந்திருந்தால் 20க்கும் மேற்பட்டோர் வந்திருக்க வேண்டுமே. ஆனால் ஒருவர்தான் உள்ளார். அதுவும் புரமோஷன் மூலம். அதனால் வன்னியர் இட ஒதுக்கீடு துவங்கியது முதல், அதாவது 1989-ல் இருந்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அதுமட்டுமின்றி, இந்த பொய் பிரச்சாரத்தை முதலில் முதலமைச்சரும் அவரது அமைச்சர்களும் நிறுத்த வேண்டும். 14% உள்ளவர்களுக்கு 5% தான் வேலை கிடைக்கிறது. மற்ற சமுக நபர்களுக்கு இரு மடங்காக வேலை கிடைக்கிறது. இதனை முதலில் Study செய்து முதலமைச்சர் சரி செய்ய வேண்டும். தரவுகள் வெளியிட ஒரு வருடம் நீட்டிப்பு தருகிறீர்கள். ஆனால், அடுத்த இரண்டே நாளில் தரவை வெளியிடுகிறீர்கள்.
இதில் என்ன நாடகமாடுகிறீர்கள்?. திமுகவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தமே கிடையாது. உங்க சமூக நீதியைத் தூக்கி குப்பையில் போடுங்கள். வெரும் பேச்சு பேசுகின்றனர். முதலமைச்சரை சந்திக்கும் போது ஒவ்வொரு முறையும், அவர்கள் சொல்வது டேட்டா இல்லை என்று தான். ஆனால் ஆர்டிஐயில் போட்டு தரவுகளை வெளியிடும் போது, பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான தரவுகளை கேட்கும் போது மட்டும் ஏன் கொடுக்க முடியவில்லை. நாங்கள் சென்ஸ்சஸ் கேட்கவில்லை, சர்வெ கேட்கின்றோம். இதையெடுத்தால்தான் இல்லாதவர்களுக்கு அனைத்தும் கொடுக்க முடியும்.
சர்வே எடுப்பதற்கே இவர்களுக்குப் பயம் வந்துவிட்டது. சமுக நீதி குறித்து பேச இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது. ஓட்டுக்காக மக்களை ஏமாற்றுகின்றனர். தற்போது 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சரிடம் அறிவுறுத்திக் கொண்டே தான் வருகின்றோம். ஆனால், மு.க.ஸ்டாலின் இதைக் கண்டு கொள்வதாக தெரியவில்லை. இதுதொடர்பான வழக்கு எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் வரலாம். அப்போது தரவுகள் இல்லையென்றால், 69 சதவீத ஒதுக்கீடு போய்விடும்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: வன்னியர் இட ஒதுக்கீடு; 'தமிழக அரசு இப்படியான நாடகங்களை நடத்துவது நியாயமா?'