விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் விக்கிரவாண்டியை அடுத்த ராதாபுரம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.
அப்போது பிரச்சார வாகனத்தில் நின்று பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தமிழக மக்களுக்கு கிடைத்த முக்கியமான தேர்தல். இதில் தமிழ்நாட்டிற்கு சமூக நீதி பெற வேண்டும் என்றால், மாம்பழம் சின்னத்தை வெற்றி பெறச்செய்வது மட்டுமே சரியானது. திமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் அவர் குடும்பம் மட்டும் தான் வளர்ச்சி பெறும். பட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் அடுத்த மாதமே சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதில் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைக்கும்.
தமிழக அமைச்சர்கள் மூட்டை மூட்டையாக பணத்தைக் கொண்டு வந்துள்ளார்கள், அதை வாங்கினாலும் வாங்காவிட்டாலும் பிரச்னை இல்லை. மாம்பழம் சின்னம் வெற்றி பெற வேண்டும். மேலும், ஜாதி வாரி கணக்கெடுப்பு எப்போது எடுப்பீர்கள் என இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பாமக ஜி.கே.மணி கேள்வி எழுப்பியதற்கு தமிழக முதல்வர் தவறான தகவலைக் கூறினார்.
அதாவது, பீகார் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக தவறான தகவலை கொடுத்துள்ளார். ஆனால், உண்மையில் கணக்கெடுப்பில் இருந்து இடஒதுக்கீட்டில் தவறான தகவலை பீகார் மாநிலம் குறிப்பிட்டதால் அது நீக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தவறான தகவலை சட்டமன்றத்தில் கூறியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் மறுப்பு தெரிவிக்க வேண்டும். மேலும், திமுக ஆட்சி நடந்த இந்த மூன்றாண்டுகளில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டில் 10.5 விழுக்காடு தரவில்லை. ஆனால், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த மத்தியில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக கூறுவது நியாயமில்லை.
மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் தரவுகளை சேகரித்து தமிழகத்தில் சாதிவாரியாக உள் ஒதுக்கீடு கொடுப்பதில் முதலமைச்சர் மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால் தான் தர முடியும் என கூறுவதும், அமைச்சர் சிவசங்கர் எங்களிடம் தரவுகள் இருப்பதாக கூறுவதும் வேறுபடுவதாக உள்ளது.
கருணாநிதி இருந்திருந்தால் இடஒதுக்கீட்டிற்கு கையெழுத்திட்டு இருப்பார். மேலும், மறைந்த முதல்வர் கருணாநிதி மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய காரணம், பாமக போட்ட வழக்கை திரும்பப் பெற்றதால் தான் செய்ய முடிந்தது. இல்லையெனில், வேறு எங்காவது கருனாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும்” என அன்புமணி கூறினார்.
இதில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து பேசும் போது மரக்காணம், செங்கல்பட்டில் நடைபெற்ற சாராய உயிரிழப்பிற்கு பிறகும் தமிழக அரசு பாடம் கற்றுக்கொள்ளலாமல், இப்போது கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்பு வரை வந்துள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு கொண்டு வர வேண்டும், சிபிசிஐடி விசாரணை செய்தால் ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் அமையும் என்றார். பின் வாக்கு சேகரிப்பின் போது இரண்டு ஆம்புலன்ஸ்கள் வந்த காரணத்தால் வழிவிட வேண்டும் என கூறி அன்புமணி பேச்சை நிறுத்தினார்.
இதையும் படிங்க: அமைச்சர் பொறுப்பேற்று மூன்றாண்டாகியும் ஆய்வு மேற்கொள்ளவில்லையா? சபையில் கோபப்பட்ட அவை முன்னவர்!