கோயம்புத்தூர்: புத்தக வெளியீட்டு விழா மற்றும் கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூலை 27) கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது, “கொங்கு மண்டலம் என்றாலே தமிழ்நாட்டிற்கு தொழில் வளம் கொழிக்கும் இடம். தற்பொது மின்சார கட்டணம் உட்பட பல்வேறு காரணங்களால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.
தமிழக அரசு கடந்த 23 மாதங்களில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தியுள்ளது. மின்கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். கட்டண உயர்வால் தமிழ்நாட்டில் உள்ள 7.5 கோடி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின் கட்டணத்தை திரும்பப் பெறவில்லை எனில் தொழிலே செய்யமுடியாத நிலை ஏற்படும்.
திமுக தேர்தல் வாக்குறுதியில், ஆட்சிக்கு வந்தவுடன் மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், இதுவரை நடைமுறைபடுத்தவில்லை. மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிட்டால் 18 முதல் 20 விழுக்காடு கட்டணம் குறையும்.
காவிரியில் தற்போது தண்ணீர் வருகின்றது. இரு தினங்களில் மேட்டூர் அணை நிரம்பிவிடும். 1 வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 2 நாட்களுக்குப் பிறகு நீர் அனைத்தும் கடலுக்கு தான் செல்லும். 57 கால ஆட்சியில் நீரை எப்படி பயன்படுத்துவது என இவர்களுக்கு தெரியவில்லை. பல்வேறு திட்டங்கள் நிலுவையில் உள்ளது. குறிப்பாக, தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டம், நல்லாறு-பாம்பாறு திட்டம், காவிரி குண்டாறு திட்டம் போன்றவை செயல்படுத்த வேண்டும். குறுவை சாகுபடி சரியான முறையில் நடக்கவில்லை.
கோவை பகுதியில் கனிமவளக் கொள்ளை மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது. செங்கல் சூளை உட்பட பல்வேறு விவகாரங்களில் அரசு மெத்தனமாக இருக்கிறது. கோவை மாநகரில் 80 விழுக்காடு சாலைகள் மோசமாக இருக்கின்றது. கோவை மேயர் ராஜினாமா செய்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும். அத்திக்கடவு 0 அவினாசி திட்டம் எப்போது வரும்? அதில் என்ன பிரச்சினை இருக்கின்றது என கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் கஞ்சா அனைத்து இடங்களிலும் கிடைக்கின்றது. காவல்துறைக்கு தெரியாமல் எதுவும் நடந்து விடாது. தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்தாகும் வாய்ப்பு இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு பொய் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
48 லட்சம் கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. இதில் தமிழகம் வராதா? கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். ரூ.6,500 கோடி தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மட்டும் கொடுத்துள்ளனர். தமிழகத்தின் பெயர் சொல்லவில்லை என்பது பிரச்சினையா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், 3.5 லட்சம் கோடி பட்ஜெட் போடும் தமிழக அரசு, வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஆயிரம் கோடி உங்களுக்கு ஒதுக்க முடியாதா? என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வு இருக்கக்கூடாது. அது தேவையில்லாத தேர்வு என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப அதன் கொள்கைகளை விட்டுவிட வேண்டும். நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது. நீட் தேர்வில் இரண்டடுக்கு தேர்வு வரவுள்ளது என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பயிற்சி நிலையங்களை அதிகமாகலாம். நீட் தேர்வால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், குறிப்பாக தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாறி வருகின்றன. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் தமிழ்நாட்டின் வரலாறு இடம்பெறவில்லை” இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, அன்புமணி ராமதாஸிடம் தொடர்ச்சியாக பட்ஜெட் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் ஆவேசமடைந்த அவர், இரு கைகளை கும்பிட்டு "அப்பா சாமி ஆளை விடுங்க" என்றார். மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி இன்று மாலை கோவை வருகிறார். அவரிடம் பட்ஜெட் தொடர்பான இந்த கேள்விகளை கேளுங்கள் என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: சென்னை மெட்ரோ ரயிலில் கஞ்சா உபயோகித்த இளைஞர் கைது!