சென்னை: தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் 'அமுதம் மக்கள் அங்காடி' திட்டம் மூலம் ரூ.499 விலையில் பதினைந்து மளிகை பொருட்கள் அடங்கிய 'அமுதம் பிளஸ்' மளிகை தொகுப்பு விற்பனையை, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அமுதம் மக்கள் அங்காடியில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார்.
இந்த திட்டத்தில், 499 ரூபாய்க்கு கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, மிளகு, மிளகாய், தனியா, புலி, உப்பு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, பாசிப்பருப்பு, வறுகடலை, பெருங்காயத்தூள் என 3.840 கிலோ எடை அளவில் 15 பொருட்கள் இந்த அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இந்த தொகுப் தீபாவளி வரை மட்டுமே விற்பனையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து கோபாலபுரத்தைச் சேர்ந்த சௌமியா என்பவர் கூறுகையில், "இன்று காலையில் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் இந்த திட்டம் குறித்து பார்த்தேன். எனவே, என்னுடைய அம்மாவை அழைத்து வந்தேன். இந்த விற்பனை அங்காடியில் அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் தரமானதாக கிடைக்கிறது.
மேலும், அரசு இந்த திட்டத்தின் மூலம் குறைந்த விலையில் மளிகை பொருட்களை தருவது என்பது அனைத்து மக்களுக்கும் மிகவும் உபயோகமானதாக உள்ளது. பணக்காரர்களாக இருந்தாலும், ஏழை மக்களாக இருந்தாலும் குறைந்த விலையில் தரமான பொருளை வழங்குவது சிறப்பான திட்டமாக உள்ளது" என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து கண்மணி என்பவர் கூறுகையில், "குறைவான விலையில் மளிகை பொருட்கள் கிடைக்கிறது, வெளியில் விற்கும் விலையை விட இங்கு குறைவாக கிடைக்கிறது. மேலும், இந்த திட்டம் எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. குறைந்த விலையில் பொருட்களை வழங்குவது என்பது தீபாவளி நேரங்களில் மக்களுக்கு மேலும், பயனுள்ளதாக இருக்கும். பொருட்களின் தரமும் நன்றாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
மேலும் கோபாலபுரத்தைச் சேர்ந்த விஜயா என்பவர் பேசுகையில், "விலை குறைவாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், தீபாவளி வரைக்கும் மட்டும் இல்லாமல் அப்படியே தொடர்ச்சியாக இருக்குமாறு இந்த திட்டத்தை கொண்டு வந்தால் அனைத்து மக்களுக்கும் உபயோகமாக இருக்கும்" என்று கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: மரக்கன்று, காகித கலைநயம்.. புதிய முறையில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்ற கல்லூரி மாணவிகள்!
இந்த திட்டம் குறித்து அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் மூலமாக ரூ.499க்கு 15 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பின் விற்பனையை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கோபாலபுரம், அண்ணா நகர்ப் பகுதியில் உள்ள அமுதம் மக்கள் அங்காடி உட்பட சென்னையில் மொத்தம் 10 அமுதம் மக்கள் அங்காடிகளில் முதற்கட்டமாக இந்த விற்பனை துவக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் கொடுக்கப்படும் பொருட்களை வெளியில் வாங்கினால் 600 ரூபாய்க்கு மேல் வரும் ஆனால் இந்த திட்டத்தின் மூலமாக 499 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மேலும், வெளிச்சந்தையில் மளிகைப் பொருள் வாங்காமல் அமுதம் அங்காடியில் வாங்குவதால் மாதம் தோறும் 1000 முதல் 1500 வரை மக்கள் சேமிக்கின்றனர். அத்தோடு, தமிழகத்தில் 100 அமுதம் அங்காடிகள் புதிதாக தொடங்கப்பட உள்ளன.
இதுமட்டும் அல்லாது, தமிழ்நாடு அரசு சார்பில் மாதம் 25 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம். மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்படும் 8 ஆயிரம் டன் கோதுமையின் அளவில் இருந்து அக்.1 முதல் 17 ஆயிரத்து 100 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசி ஆலைகளின் எண்ணிக்கையை 700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அரசி ஆலைகளில் நவீன எந்திரங்களை பயன்படுத்துவதால் பழுப்பு, கருப்பு நிறம் இல்லாத அரசியை நியாய விலைக் கடைகளில் வழங்கப்படுகிறது" தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்