புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் இல்ல திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ள வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பேசியது குறித்து வீடியோ பார்த்தேன். கைது செய்யும் அளவிற்கு அதில் எதுவும் அவர் பேசவில்லை. திமுக எப்பொழுதுமே இரட்டை வேடம் போடும். டெல்லிக்குச் சென்று பாஜகவிடம் மண்டி இடுவார்கள். தமிழகத்திற்கு வந்து பாஜக தலைவர்களை காட்டமாக விமர்சனம் செய்வார்கள்.
சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு விஷயத்தில் எதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு இவ்வளவு சீற்றம் என்பது தெரியவில்லை. காலப்போக்கில் இது தெரியவரும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது நான்கரை வருட காலம் என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆட்சியை தக்க வைப்பதற்காக என்னென்ன பல்டி அடித்தார். எடப்பாடி பேசுவதை காமெடியாக தான் இருக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஒன்று சேர்வதற்கு உண்டான வாய்ப்பு இல்லை. 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு அதிமுகவிற்கு மூடூவிழா எடப்பாடி பழனிசாமி நடத்தி விடுவார். அதற்குள் அங்கு உள்ள நிர்வாகிகள் தொண்டர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.
பொதுக்கூட்டம் மாநாடு நடக்கும்போது காவல்துறை சில விதிமுறைகளை விதிப்பார்கள். அதை நிறைவேற்றுவதாக அறிவித்தால் அனுமதி கொடுப்பார்கள். அதே போன்று விஜய் மாநாட்டிற்கும் விரைவில் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
கடந்த முறைகள் முதலமைச்சர் வெளிநாடு சென்று விட்டு வந்தாலும் முதலீடுகள் பேப்பரில் தான் உள்ளது. எந்த முதலீடும் வரவில்லை. தற்போது முதலீடு ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார். வெளிநாட்டிலிருந்து திரும்பட்டும் பார்க்கலாம். அரசியல் குறித்து படிப்பதற்காக அண்ணாமலை லண்டன் சென்றுள்ளார். நவம்பர் மாத இறுதியில் அவர் திரும்பி வந்து விடுவார். அதுவரை கட்சியை நிர்வகிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக அனைத்தும் ஒன்று சேரும் என்று திவாகரன் கூறியுள்ள கருத்துக்கு, அவர் அளித்த பேட்டிக்கெல்லாம் நான் பதில் கூற முடியாது. தனபாலை முதல்வராக்கலாம் என்று நான் முன்மொழிந்ததாக திவாகரன் கூறியுள்ளதற்கு, திவாகரன் என்ன பொறுப்பில் இருந்தார் என்று எனக்கு தெரியவில்லை.
இதிகாசத்திலும், புராணத்தில் தான் சகுனி குறித்து நாம் கேள்வி பட்டுள்ளோம். இந்த நூற்றாண்டிலும் வாழும் சகுனி அவரைப் போன்று இன்னமும் வாழ்கிறார்கள். எனவே அவர் கேள்விக்கெல்லாம் நான் பதில் அளிக்க முடியாது" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "மகாவிஷ்ணு விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்" - அமைச்சர் அன்பில் மகேஷ உறுதி! - spiritual speech issue