அரியலூர்: கடலூர் மாவட்டம், வானமாதேவி மெயின் ரோடு தெருவைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி செல்வி. 80 வயது மூதாட்டியான இவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டு ஊர் ஊராக சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் - கடாரங்கொண்டான் செல்லும் சாலையில் அமைந்துள்ள கொடப்பேரி அருகே மூதாட்டி செல்வி நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு நடுக்காட்டில் உள்ள தண்ணீர் இல்லா கிணற்றில் மூதாட்டி எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
கிணற்றில் விழுந்த மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது மூதாட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து உடனடியாக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களான ஓட்டுநர் குமரவேல், டெக்னீசியன் பிரேமா இருவரும் பொதுமக்களின் உதவியுடன் தண்ணீரில்லா கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.
பின்னர், அங்கு மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது, மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கிணற்றில் விழுந்த மூதாட்டிக்கு கையில் லேசாக முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பொதுமக்கள் உதவியுடன் மூதாட்டியை பத்திரமாக மீட்ட ஓட்டுநர் குமரவேல், டெக்னீசியன் பிரேமா உள்ளிட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.