திருச்சி: மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பாகக் காங்கிரஸ் கட்சி கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளர் ஜோதி மணிக்கு ஆதரவாக திமுக மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடன் இருந்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,"கரூர் மாவட்டத்தில் ஜோதி மணிக்கு கை சின்னத்தில் பட்டனில் வைக்கும் ஒரு ஓட்டு - மோடிக்கு வைக்கின்ற வேட்டு. சென்ற முறை ஜோதி மணியை சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தீர்கள்.
இந்த முறை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால் நான் மாதத்திற்கு இரண்டு முறை கரூர் மாவட்டத்திற்கு வந்து இங்குள்ள அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோர்களைக் கொண்டு, இங்கு உள்ள கோரிக்கைகள் அனைத்தும் தமிழக முதலமைச்சரிடம் கொண்டு சென்று தீர்த்து வைப்பேன். மாவட்டத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தருவேன்.
நான் கருணாநிதி பேரன் செய்வதைச் சொல்வேன்; சொன்னதைச் செய்து உள்ளேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான் கொடுத்த வாக்குறுதி மணப்பாறை பகுதிக்கு அரசு கலைக் கல்லூரி கட்டி தரப்படும் எனக் கூறினேன். அது தற்பொழுது நிறைவேற்றி உள்ளேன். அதேபோல் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றி உள்ளேன் மற்றும் மணப்பாறை வையம் பட்டி பகுதிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
29 பைசா பிரதமர்: பிரதமருக்கு நான் புதிதாக வைத்திருக்கும் பெயர் 29 பைசா எனப் பெயர் வைத்துள்ளேன். ஏன் தெரியுமா? நாம் கட்டுகின்ற ஜி.எஸ்.டி வரி ஒரு ரூபாய்க்கு மத்திய அரசு தமிழகத்திற்கு 29 பைசா மட்டுமே தருகின்றது.
பாஜக ஆளுகின்ற மற்ற மாநிலங்களில் ஏழு ரூபாயும், உத்தரப்பிரதேசத்தில் மூன்று ரூபாயும் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டை வஞ்சிக்கின்றார் மோடி. அதனால் அவருக்கு நான் வைத்துள்ள பெயர் 29 பைசா. (29 பைசா போட்டோவை காட்டி பேசினார்).
எய்ம்ஸ் மருத்துவமனை: தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஒரு செங்கல்லை மோடியும், எடப்பாடியும் வைத்தனர். அந்த செங்கல்லை நான் எடுத்து வந்துள்ளேன். ஏனென்றால் தற்பொழுது வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு நிதி ஒதுக்கப்படவில்லை.
அதற்குப் பின்னால் மற்ற மாநிலங்களில் தொடங்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் செங்கல்லை எப்பொழுது தருவேன் என்றால் இவர்கள் கட்டி முடிக்கும் பொழுது கேட்டால் அந்த செங்கல்லைத் தருவேன் என AIMS என்று எழுதிய செங்கல்லைக் காட்டி பேசினார்.
பாதம் தாங்கி பழனிசாமி: அது என்ன பாதம் தாங்கி பழனிசாமி? இந்த போட்டோவில் நன்றாகப் பாருங்கள் பழனிசாமி தவழ்ந்து போற காட்சி உள்ளது. அவர் தவழ்ந்து எதற்குப் போகிறார் என்றார் கீழே விழுந்து கிடந்த சில்லறைக் காசுகளைப் பொறுக்குவதற்காகத் தான் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
காலில் விழுந்து முதலமைச்சரானவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பாதம் தாங்கி பழனிசாமி. வெட்கமில்லாமல் அதை பெருமையாகப் பேசுகிறார். மீண்டும் சசிகலா காலில் போய் எடப்பாடி விழுந்தால், அவர் உங்களை எட்டி உதைப்பார். எடப்பாடி சசிகலாவுக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் நம்பிக்கை துரோகம் செய்தவர்.
பிரதமர் மோடி கொரோனாவை விரட்டியடிக்க, வீடு தோறும் விளக்கு பிடிங்க, கை தட்டுங்கள், மணி ஆட்டுங்கள் என்று கொரோனா காலத்தில் பேசினார். ஆனால், நமது தமிழக முதலமைச்சர், அதிகப்படியாக இந்தியாவில் தமிழகத்தில் உள்ள மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள களப்பணியாற்றி கோவையில் உள்ள மருத்துவமனையில், முதலமைச்சரே கொரோனா வார்டுக்கு சென்று நலம் விசாரித்தார்.
மகளிர் கட்டணமில்லா பேருந்து: மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை மகளிர் ஸ்டாலின் பஸ் என்றே அழைக்கின்றனர். 460 கோடி பயணங்கள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாயில் வடை சுடும் பிரதமர்: பிரதமர் மோடி தமிழகத்திற்கு இதுவரை ஒன்றும் செய்யவில்லை. வாயில் வடை சுடுகிறார். அந்த வடையை அவரே சாப்பிடுகிறார். அவர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும், ஒரு தொகுதியிலும் டெபாசிட் கூட வாங்க முடியாது.
மகளிர் உரிமைத் தொகை: தமிழகம் முழுதும் 1.60 கோடி பேர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து இருந்தார்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது. இது மிகப்பெரிய திட்டம்.
இன்னும் ஆறு மாதங்களில் குறைகள் சரி செய்யப்படும். தற்போது வரை 1.16 கோடி பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் 1 கோடியே 60 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் நான் உறுதி அளிக்கிறேன்.
காலை உணவுத்திட்டம்: இந்தியாவிலேயே முதன் முறையாக நமது முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். இப்போது பல மாநிலங்கள் அவற்றைப் பின்பற்றுகின்றன. அந்த திட்டத்தைக் கனடா நாட்டிலும் விரிவுபடுத்தி அந்த நாட்டுப் பிரதமர் அறிவித்துள்ளார்.
40க்கு 40: போன முறை 40க்கு 39 தொகுதி என்ற பெரிய அங்கீகாரத்தை மக்கள் கொடுத்தார்கள். இந்த முறை 40க்கு 40 என்ற வெற்றியை மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளில் பரிசாக வழங்குவோம்.
கல்வி உரிமை, நிதி உரிமை, மொழி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளை மீட்க, இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். நான் பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் ஒரே மாதிரி தான் பேசுகிறேன். அதானி ஏர்போர்ட், துறைமுகம், மின்சாரம் வந்துவிட்டது. நம் மீது மிரட்டல்கள் விடுகின்றனர்.
செந்தில் பாலாஜியைச் சிறையில் வைத்துள்ளார்கள். திமுக அவரை கைவிடாது. அந்த பொய் வழக்குகளை உடைத்து, அவரை வெளியே கொண்டு வருவோம். ஜோதி மணியின் நன்றி அறிவிப்பு விழாவில், செந்தில் பாலாஜி கண்டிப்பாக இருப்பார் என்று பேசினார்.
இந்த கூட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவ்வழியே செல்ல முடியாமல் அடுத்தடுத்து இரண்டு 108 ஆம்புலன்ஸ்கள் திருப்பி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜூலை 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது... டிஎன்பிஎல் கிரிக்கெட் கொண்டாட்டம்! - TNPL 2024 Schedule