மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தின் மையப் பகுதியில் புனித சின்னப்பர் என்ற தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் முன்னாள் மாணவிகள் சங்கம விழா நடைபெற்றது. இதில் 1982 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை கல்வி பயின்ற முன்னாள் மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் பேராசிரியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பேரூராட்சி தலைவி, குடும்பத் தலைவி, நிறுவனத் தலைவர் போன்ற பல்வேறு நிலைகளிலும் உள்ள முன்னாள் மாணவிகள் இந்த சங்கம விழாவில் ஒன்று கூடி, ஒருவருக்கொருவர் நட்பைப் பரிமாறிக் கொண்டனர்.
மேலும் தாங்கள் பயின்ற வகுப்புகளுக்கு சென்றும் பள்ளியைச் சுற்றி வந்தும், மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் செல்போனில் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். முன்னதாக விழா மேடையில், முன்னாள் மாணவிகள் சேர்ந்து நடிகர் விஜயின் மாஸ்டர் பட பாடல் மற்றும் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு நடனமாடியது அனைவரையும் உற்சாகப்படுத்தினர்
மேலும் சிலர் ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே என்ற பாடலை பாடினர். அப்போது மேடையின் கீழே அமர்ந்திருந்த மாணவிகள் பள்ளியின் நினைவுகளைக் கண் கலங்கியது காண்போரை மெய்மறக்கச் செய்தது. ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த இந்த மாணவர்களின் சங்கம விழா, கடந்த 6 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பள்ளித் தலைமை ஆசிரியர் அருள் சகோதரி சவரியம்மாள் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் அலெக்சாண்டர் ஆகியோரின் முன்னெடுப்பால் இந்த விழாவானது நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மாணவிகள் கூறியதாவது, "பல ஆண்டுகளுக்குப் பிறகு எங்களுடன் படித்த தோழிகளையும், எங்களுடன் ஆசிரியர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. இது எங்களுக்கான நாளாக இருந்தது. ஒரு நாள் குடும்ப வாழ்க்கையை மறந்து, இந்தநாளை கொண்டாடினோம். இதனை முன்னெடுத்த ஆசிரியர் பெருமக்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பரதநாட்டியம் மூலம் சூரசம்ஹாரத்தை கண்முன் நிறுத்திய மாணவிகள்.. திருச்செந்தூர் முருகன் கோயில் பக்தர்கள் பரவசம்!