சென்னை: புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவமனை மற்றும் மருத்துவமனை அல்லாத பயன்பாட்டுகளுக்காக 49 ஆயிரத்து 479 சதுர மீட்டர் பரப்பளவில் 201 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டுமானங்கள் கட்ட திட்டமிடப்பட்டு, 31 ஆயிரத்து 479 சதுர மீட்டர் பரப்பில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இந்த கட்டுமானங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற்றால் மட்டுமே கட்டிட பணி முடிப்புச் சான்று வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சுற்றுச்சூழல் ஒப்புதல் இல்லாமல் பணி முடிப்புச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, கடந்த 2006ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில், 50 ஆயிரம் சதுர மீட்டர் முதல் ஒன்றரை லட்சம் சதுர மீட்டர் பரப்பு வரையிலான மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற அவசியம் இல்லை என்று ஜிப்மர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், சுற்றுச்சூழல் ஒப்புதல் இல்லாமல், புதிய கட்டிடங்களுக்கு ஒரு வாரத்தில் பணி முடிப்பு சான்றிதழ் வழங்கும் படி, புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : "திட்டம் யாரால் தொடங்கப்பட்டிருந்தாலும் செயல்படுத்தியது திமுகதான்" - ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு கே.என்.நேரு பதில்