கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு பகுதியைs சேர்ந்தவர் மாணிக்கம். தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் பழங்குடியின மக்களுக்கு சமூக சேவைகளையும் செய்து வருகிறார். இவரது நண்பர் அப்துல் ரகுமான் என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி அவசர வேலைக்காக மாணிக்கத்தின் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
அப்துல் ரகுமான் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது சாய்பாபா காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அப்துல் ரகுமானை பிடித்து, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பேருந்து நிலைய கட்டண வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு டோக்கன் போட்டுள்ளனர்.
இந்த விசயத்தை அப்துல் ரகுமான், மாணிக்கத்திடம் கூறாமல் வேறு ஏதேதோ காரணங்கள் சொல்லி வாகனத்தை மீட்டு தராமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் உண்மை தெரிய வரவே மாணிக்கம் சில மாதங்களுக்கு முன்பு அபராதத் தொகை 10 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தி விட்டு வாகனத்தை எடுப்பதற்கான ரசீதை போலீசாரிடம் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: பகலில் தங்கம் விற்பனை.. இரவில் ஷோஷியல் மீடியாவில் பெண்கள் விற்பனை.. போலீசிடம் சிக்கிய பலே இளைஞர்!
ஆனால், காவல்துறையினர் ரசீதை தர காலம் தாழ்த்தி வந்துள்ளனர். பின்னர் ஒரு வழியாக நேற்று (அக்.09) அந்த ரசீதை பெற்றுக் கொண்ட மாணிக்கம் தனது இருசக்கர வாகனத்தை எடுப்பதற்காக சாய்பாபா காலனி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சி இருசக்கர வாகன நிறுத்தம் இடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு, ரசிதை பெற்றுக்கொண்ட ஸ்டாண்ட் ஊழியர்கள் 14 ஆயிரத்து 40 ரூபாய் கொடுத்துவிட்டு இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளான மாணிக்கம், தனது நண்பர் செய்த தவறுக்கு ஏற்கனவே அபராதம் செலுத்திய நிலையில் மீண்டும் எதற்காக பணம் கேட்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
அதற்கு, "வாடகை பணத்தை செலுத்தினால் மட்டுமே வாகனத்தை திருப்பி தர முடியும்" என ஸ்டாண்ட் ஊழியர்கள் கூறியுள்ளனர். இது குறித்து காவல்துறையினரிடம் கூறியிருப்பதாக கூறிய மாணிக்கம், இருசக்கர வாகன நிறுத்தம் இடத்தின் ரசீதில் ஐந்து ரூபாய் என போடப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் விடும் வாகனங்களுக்கு நாள் ஒன்றுக்கு, முறைகேடாக 40 ரூபாய் கட்டணம் வசூலிப்படுவதாகவும், அதன்படி 351 நாட்களுக்கு 14 ஆயிரத்து 40 ரூபாய் கட்டணம் தனக்கு விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாணிக்கம் கூறினார்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-10-2024/22648323_etvwc.jpg)
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்