சேலம்: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அகில இந்திய மீனவ சங்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் அகில இந்திய மீனவ சங்கம், எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய அமைப்புச் செயலாளர் சேவியர், "அகில இந்திய மீனவ சங்கம் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த காலங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீனவர்களையும் பாதுகாத்து வந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தொண்டாற்றி வரும் எடப்பாடி பழனிசாமி மீனவர்களின் வாழ்வில் கருணை உள்ளத்துடன் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருப்பதை நினைத்து மீனவர்களாகிய நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். அந்த நன்றி உணர்வுடன் அகில இந்திய மீனவர் சங்கம் தொடர்ந்து இந்த தேர்தலில் அதிமுகவுடன் பயணிக்கிறது.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் மீனவ சமுதாயத்தினர் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தென் சென்னை, கன்னியாகுமரி, பெரம்பலூர் ஆகிய மூன்று தொகுதிகள் மற்றும் புதுவை தொகுதியில் வாய்ப்பளித்திருப்பதை நன்றியோடு எண்ணிப் பார்க்கிறோம். இந்த தேர்தலில் 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றிக்காக உழைத்திடத் தொடர்ந்து நாங்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம்.
வருகின்ற 2026இல் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் ஜெயலலிதா ஆட்சி அமைய எங்களின் ஆதரவு தங்களோடு தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்" என்று தெரிவித்தார். இந்த பேட்டியின் போது அகில இந்திய மீனவ சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தமிழகத்தில் தங்கியிருந்தாலும் ஒரு தொகுதியிலும் பாஜக வெற்றி பெறாது - உதயநிதி ஸ்டாலின்! - Lok Sabha Election 2024