சென்னை: ஐஐடி-க்களில் முதன்முதலாக நிறுவப்பட்ட வெளிநாட்டுக் கல்வி வளாகமான, சென்னை ஐஐடி சான்சிபார் வளாகத்தில் பயிலும் இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டத்தை, 'ஏர்டெல் ஆப்பிரிக்கா அறக்கட்டளை' இன்று அறிவித்துள்ளது.
சென்னையில் ஐஐடியின் சான்சிபார் வளாகத்தில், இளங்கலை தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பட்டப்படிப்பில் சேரப் பதிவு செய்துள்ள பல்வேறு சமூக, பொருளாதார பின்னணியைக் கொண்ட தகுதி படைத்த மாணவர்களுக்கு ஆதரவு அளிப்பதை இந்த கல்வி உதவித் தொகைத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
5 லட்சம் அமெரிக்க டாலர் ஒதுக்கீடுத் தொகையுடன் தொடங்கப்படும் இத்திட்டத்தின் மூலம், 10 இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்கள் தங்களின் முழுப் படிப்புக் காலமான 4 ஆண்டுகளுக்கும் பயன்பெறுவர். இந்த கல்வி உதவித்தொகைத் திட்டம், பின்தங்கிய பின்னணியில் இருந்து சான்சிபாரில் பதிவு செய்துள்ள தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் முதல் முயற்சியாகும்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நிர்வாக எம்பிஏ படிப்பு
இது நைஜீரியா, கென்யா, மலாவி, உகாண்டா, ஜாம்பியா,தான்சானியா, ருவாண்டா, காங்கோ குடியரசு (DRC), நைஜர், சாட், காங்கோ , காபோன், மடகாஸ்கர், சீஷெல்ஸ் ஆகிய 14 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்காண்டு பாடத்திட்டத்திற்கு கல்லூரிக் கட்டணத் தொகையாக 12,000 அமெரிக்க டாலர்களை இக்கல்வி நிறுவனம் நிர்ணயித்துள்ள நிலையில், இவர்களுக்கு 100 சதவீதம் கல்விக் கட்டணமும் வழங்கப்படும்.
கூடுதலாக தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் செலவுத்தொகையாக 500 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும். ஆப்பிரிக்காவின் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்குப் பங்களிக்கும் வகையில் எதிர்காலத் தலைமையை உருவாக்கவும், வாழ்க்கையை வடிவமைக்கவும் இந்த முன்முயற்சி உதவிகரமாக இருக்கும் என்று சென்னை ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்