சென்னை: வங்க கடலில் இலங்கை அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அந்த வகையில் சென்னை விமான நிலையப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக காலை முதல் இருந்து விமான சேவைகள் தாமதமாக இயக்கப்படுவது மட்டும் அல்லாமல், தரை இறங்குவதிலும் சிக்களை எதிர்கொண்டு வந்தது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து மூன்று புறப்பாடு விமானங்கள் மற்றும் மூன்று வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
தரையிறங்க முடியாமல் தவித்த விமானம்: மேலும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து அலையன்ஸ் ஏர் பயணிகள் விமானம் 72 பயணிகளுடன் இன்று பகல் 11.30 மணி அளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்தது. அந்த நேரத்தில் சென்னை விமான நிலைய பகுதியில் பலத்த மழை பெய்துகொண்டு இருந்தது. மேலும் மோசமான வானிலை நிலவியது. இதன் காரணமாக சில மணி நேரம் வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்த விமானம் மீண்டும் ஹைதராபாத்துக்கே திருப்பி சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதிகுள்ளகினர்.
சென்னை புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரையில் ஆலந்தூர்,மீனம்பாக்கம், விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், சேலையூர், முடிச்சூர், வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து விட்டுவிட்டுக் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஜிஎஸ்டி சாலை,தாம்பரம்- வேளச்சேரி பிரதான சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது மேலும் தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதையும் படிங்க: டிசம்பர் 15இல் மீண்டுமொரு காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை வானிலை மைய இயக்குநர் தகவல்!
மழைநீரில் மூழ்கிய ஜிஎஸ்டி சாலை: இந்த நிலையில் தாம்பரத்திலிருந்து கிண்டி நோக்கிச் செல்லக்கூடிய ஜிஎஸ்டி சாலையில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் ஜிஎஸ்டி சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சாலையில் தேங்கியுள்ள மழை நீரில் இரு சக்கர வாகனங்களை ஓட்ட முடியாமல் இறங்கி தள்ளிச் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் ஜிஎஸ்டி சாலை ஓரங்களில் முட்டி அளவிற்கும் மழை நீர் தேங்கியுள்ளதால் சிலர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் ஜிஎஸ்டி சாலையில் தேங்கியுள்ள மழை நீரை மின் மோட்டார்கள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.