கோயம்புத்தூர்: மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று (செவ்வாய்க்கிழமை) பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது பேசிய எஸ்.பி.வேலுமணி, "தமிழகத்தில் பொதுமக்களை வஞ்சிக்கும் விதமாக திமுக அரசு சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் போன்றவற்றை உயர்த்தி உள்ளது" என்றார்.
மேலும், 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் எனவும், தமிழகத்தில் நடைபெறும் தொடர் கொலைகளை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறதாகவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் குற்றம் சாட்டினார்.
திருப்பத்தூர் ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் திருப்பத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், "இனி அதிமுக சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முடிவாகியுள்ளது. திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை அதிமுக தொண்டனும் ஒருவர் கூட ஓயக்கூடாது" எனப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், 3 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். மாதாமாதம் மின் கட்டணம் கணக்கெடுக்கப்படும் என்று கூறிவிட்டு, 2 மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கெடுப்பு செய்கின்றனர். மேலும், தமிழகத்தில் கடந்த 200 நாட்களில் 595 கொலைகள் நடந்துள்ளன" என குற்றம் சாட்டினார்.
தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டம்: தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.கே.பாரதி மோகன் தலைமையில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, தமிழகத்தில் திமுக பொறுப்பேற்ற பிறகு மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதையும், அத்தியாவசியப் பொருட்களான பருப்பு, பாமாயில் ஆகியவை முறையாக ரேஷனில் வழங்கப்படுவதில்லை எனக் கூறி அரசைக் கண்டித்து கையில் லாந்தர் விளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்: ஈரோடு அடுத்த கோபிசெட்டிபாளையத்தில் தனியார் திரையரங்கு அருகே, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சத்தியமங்கலம் எம்எல்ஏ பண்ணாரி, முன்னாள் எம்பி சத்தியபாமா உட்பட அதிமுகவினர் மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், "அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை இந்த அரசு முடக்கி வைத்துள்ளது. கள்ளச்சாராயம், கொலை, கொள்ளை அதிகரித்து சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
இதை தடுக்கின்ற சக்தி திமுகவுக்கு இல்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். திமுகவினர் ஒவ்வொரு தேர்தலிலும் பணத்தை கொடுத்தால் வெற்றி பெற்று விடுவோம் என்று நினைக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்புகிற தேர்தலாக அமையும்.
தமிழகத்தில் மக்களாட்சி நடைபெறவில்லை, அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரு திட்டத்தை மக்கள் எதிர்த்தால் உடனடியாக மாற்றி அமைக்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார். ஆனால், இந்த ஆட்சியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருக்கின்றனர்" என குற்றம் சாட்டினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "முதலமைச்சர் மாஞ்சோலை மக்களுக்கு கருணை காட்ட வேண்டும்" - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!