சென்னை: தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை மத்திய சென்னை தொகுதி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் பார்த்தசாரதி, அதிமுக மாவட்ட கழக செயலாளர் ஆதிராஜாராம், பாலகங்கா உள்ளிட்டோர் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேசிய மத்திய சென்னை தொகுதி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் பார்த்தசாரதி, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட சேப்பாக்கம் பகுதியில் உள்ள நடுக்குப்பம், அயோத்தி குப்பம் ஆகிய இடங்களில் உள்ள 11 வாக்கு மையங்கள் மிகவும் பதற்றமான வாக்கு மையங்கள் என்ற நிலை உள்ளது.
அந்த பகுதிக்கு உட்பட்ட 23 வாக்குச்சாவடிகளை பதற்றமான வாக்குச்சாவடிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் பதற்றமான வாக்குச்சாவடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருப்பதாக பார்த்தசாரதி குறிப்பிட்டார்.
அதனை தொடர்ந்து பேசிய அதிமுக மத்திய சென்னை மாவட்ட கழக செயலாளர் ஆதி ராஜாராம், ”நடுக்குப்பம், அயோதி குப்பம் பகுதிக்குட்பட்ட வாக்கு மையங்களில் ஏற்கனவே பல குளறுபடிகள் நடைபெற்றுள்ளது. பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 11 வாக்கு மையங்களுக்கு உட்பட்ட 20க்கும் அதிகமான வாக்குச்சாவடிகளை பதற்றமான வாக்குச்சாவடிகள் பட்டியலில் இருந்து நீக்கி இருப்பது மேலும் தவறுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பாக அமையும் என்பதால், அங்கு கூடுதல் துணை ராணுவ படையினரை நிறுத்தி வாக்குப்பதிவு நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளதாக கூறினார். மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கூறி இருப்பதாக ஆதி ராஜாராம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் பெற்றோரை இழந்த குழந்தையை 2 வருடங்களுக்கு பிறகு மீட்ட சித்தி.. சென்னை அழைத்துவரப்பட்டது எப்படி? - TN Child Rescued From US