சென்னை: கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஜூலை 17ஆம் தேதி நியமித்தார். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரியும், சட்டமன்றத்தில் தனக்கு அருகில் இருக்கை ஒதுக்கக் கோரியும் சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து ஐந்து முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். கட்சியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கும், சட்டமன்ற செயலாளருக்கும் உத்தரவிட வேண்டும் எனவும், இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்த போது, தற்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ஒதுக்கி விட்டதால் மனுவை திரும்பெற அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, மனுவை திரும்பப் பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு; சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை..