சேலம்: மேச்சேரி அருகே அதிமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பதற்காக வருகை தந்தார். அப்போது வழியில் செலக்கல் திட்டு மற்றும் மல்லிகுந்தம் ஆகிய இரண்டு இடங்களில் அதிமுக கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றிவைத்தார்.
செலக்கல் திட்டு பகுதியில் கொடியை ஏற்றிவைத்து விட்டுப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அறிவித்த 520 அறிவிப்புகளில் ஒரு சிலதை மட்டும் நிறைவேற்றிவிட்டு 100% நிறைவேற்றி விட்டதாகப் பச்சைப் பொய் கூறுகிறார். ஆட்சிக்கு வந்த பின்னர் வாக்களித்த மக்களை மறந்தது திமுக. திமுக இளைஞரணி மாநாடு ரெக்கார்டு டான்ஸ்க்காகவே இரண்டுமுறை தள்ளிவைத்து நடத்தப்படுகிறது.
மதுரையில் அதிமுக நடத்திய எழுச்சி மாநாடு, மக்களுக்கு என்ன செய்வோம் என்று எடுத்துக்காட்டிய மாநாடு. அதிமுக நடத்திய மாநாடு மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நடத்திக் காட்டினோம். அதிமுக ஆட்சியில் இருந்த காரணத்தினால் தான் தமிழகம் இந்திய அளவில் உயர்ந்து நிற்கிறது. இந்திய நாட்டிற்கு முன்னோடியாக அதிமுக அரசு இருந்தது” எனத் தெரிவித்தார்.
அதேபோல மேச்சேரி அருகே உள்ள மல்லிகுந்தம் பகுதியில் அதிமுக கொடியை ஏற்றிவைத்து தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இரண்டுமுறை தேதி குறித்து திமுக இளைஞரணி மாநாடு நடத்த முடியாமல் மூன்றாவது முறையாக நடத்துகின்றனர். அதற்குக் காரணம் சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. அதில் யாரும் நுழைய முடியாது. அப்படி நுழைய முயன்றால் மக்கள் விரட்டியடிப்பார்கள்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மக்கள்தான் வாரிசு. இருபெரும் தலைவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே உழைத்தனர். அதிமுக நாட்டு மக்களுக்காகத் திட்டம் தந்தோம். திமுக தனது வீட்டு மக்களுக்காகத் திட்டம் தீட்டி அதில் கொள்ளையடிக்கின்றனர். அவர்களுக்கு எந்தெந்த வகையில் முடியுமோ, அதிகாரம் தந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால், 2 ஆண்டு 8 மாதம் ஆகிய நிலையில் மேட்டூர் உபரிநீரைக் கொண்டு 100 ஏரி நிரப்பும் திட்டத்தை திமுக கிடப்பில் போட்டுள்ளனர். அது ஆமை வேகத்தில் நடக்கிறது. பலமுறை அரசின் கவனத்திற்குக் கொண்டுவந்தும் கண்டுகொள்ளவில்லை.
ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கவேண்டும் என்பதற்காக 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தந்தோம். இதன் மூலம் 2 ஆயிரத்து 160 மாணவர்கள் மருத்துவம், பல்மருத்துவம் படிக்கின்றனர். அவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றது. மாணவர்கள் விஞ்ஞான கல்வி பெற 52 லட்சம் மடிக்கணினி தந்தோம். அதனையும் முடக்கியது திமுக. விடியா திமுக அரசுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சரியான பதிலடி கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் செம்மலை, மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், மேச்சேரி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வம், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராஜா உட்படக் கழக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
முன்னதாக, சேலம் நெடுஞ்சாலை நகர்ப் பகுதியில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் இன்று நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழாவில், எடப்பாடி பழனிசாமி தமது குடும்பத்தினருடன் பங்கேற்று, மக்களோடு, மக்களாகச் சேர்ந்து நின்று சாமி தரிசனம் செய்தார்.