மதுரை: அதிமுக - பாஜக இடையே உரசல் அதிகரித்துவரும் நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவ்வப்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறி பேட்டி அளித்து வருகிறார். இதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக மருத்துவ அணி மாநிலச் செயலாளர் டாக்டர் சரவணன் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில்,"நான் அதிமுகவின் மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளராக உள்ளேன். எங்களுடைய பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனி்சாமியை கொச்சைப்படுத்தும் விதமாகவும் அண்ணாமலை பேசி வருகிறார்.
குறிப்பாக கடந்த 25.08.2024-ம் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் பேசி உள்ளார். எனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன் கூறுகையில், "தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து 3ஆம் தலைமுறையாக அதிமுகவை வழிநடத்திக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் இங்கு திமுக- அதிமுக இடையேதான் போட்டி. பாஜக என்பது நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போன்றது. பாஜக தலைவர் அண்ணாமலை என்பவர் அரசியல் வியாபாரி அதிமுகவின் நிர்வாகிகள் மட்டும் 6 ஆயிரம் பேர் உள்ளனர். ஒவ்வொருவரும் கிளர்ந்தெழுந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெடும்.
ஆனால் நாங்கள் இந்த விவகாரத்தை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக மதுரை காவல் ஆணையரை சந்தித்து அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்துள்ளோம். மேலும் மாவட்டம்தோறும் உள்ள அதிமுக நிர்வாகிகள் ஆன்-லைன் வாயிலாகப் புகார் அளிக்க உள்ளனர்.
கர்நாடகாவில் அண்ணாமலை என்ன செய்து கொண்டிருந்தார் என தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் வெறுப்பை விதைத்துக் கொண்டு இருக்கிறார். பாஜகவில் இருக்கும் மூத்த தலைவர்களான தமிழிசை செளந்தரராஜன், இல.கணேசன், சி.பி.ராதகிருஷ்ணன் ஆகியோர் செய்த சுமுகமான அரசியலை அண்ணாமலை செய்யவில்லை.
மைக் கிடைத்தால் போதும். ஒருவரை அவதூறாகப் பேசிவிடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் நாவை அடக்கி பேச வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டில் எந்தவொரு மாவட்டத்திலும் அண்ணாமலை கால் வைக்க முடியாது. அவரை வழிமறித்து அதிமுக தொண்டர்கள் தயாராக உள்ளனர்" என்று சரவணன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “இதைச் செய்தால் அண்ணாமலையை முதல்வராக்குகிறோம்” - அதிமுக மாஜி எம்எல்ஏ பரபரப்பு பேச்சு!