புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள தனியார் மஹாலில் எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் சார்பில், சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அனைத்து சமுதாய தலைவர்கள், ஜமாத்தார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "இந்தியாவின் மூத்த அரசியல்வாதி, நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர். அவருக்குக் காங்கிரஸ் தலைமை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை மறுத்துள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். காங்கிரஸும், திமுகவும் சேர்ந்து அவருக்குத் திட்டமிட்டு வாய்ப்பு இல்லாமல் செய்து விட்டனர். அது நமக்கு வருத்தமாக இருக்கிறது.
ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு அதன் தலைவர் நெல்லை முபாரக் கேட்ட தொகுதியை அதிமுக வழங்கியுள்ளது. இஸ்லாமிய மக்கள் அதிக அளவில் வசிக்கக்கூடிய திண்டுக்கல் தொகுதியைக் கேட்டு, அங்கு மகிழ்ச்சியாகப் போட்டியிடுகிறார். தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவராக உள்ள வைகோவின் மகன் துரை வைகோ இப்பொழுதுதான் முதல் முறையாகத் தேர்தல் களம் காண்கிறார்.
அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் கேட்ட தொகுதியைக் கொடுத்து, அவர் கேட்ட இடத்தைக் கொடுத்து அவரை கௌரவப் படுத்தியிருக்க வேண்டும். அதைத் திராவிட முன்னேற்றக் கழகம் செய்யத் தவறிவிட்டது. முதல் முறையாகத் தேர்தல் களம் கண்டுள்ள துரை வைகோவிற்கு விருப்பம் இல்லாத தொகுதி திணிக்கப்பட்டுள்ளது. அவர் தன்னுடைய மனம் இழக்கும் அளவிற்கு, ராக்கிங் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், கூட்டணி என்றால் அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ போன்று இருக்க வேண்டும். அரசியல் காரணத்திற்காகவோ அல்லது ஆதாயத்திற்காகவோ இந்த தகவலை நான் தெரிவிக்கவில்லை. அதனால் மண்ணின் மைந்தனான, திருச்சி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.