தேனி: வடபுதுபட்டியில் தனியார் கல்லூரி சார்பில் கலை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து மாஃபா பாண்டியராஜன் கூறியதாவது, “ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நான் உறுப்பினராக இருந்துள்ளேன். அதில் வரி குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனை மாநில அரசு தான் முன்னெடுக்க வேண்டும். அன்னபூர்ணா சீனிவாசன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி குறைக்க வைத்த கோரிக்கை சரியானது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
இதையும் படிங்க: பன் + க்ரீம் வீடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்னபூர்ணா நிர்வாகம்!
அதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் முறையாக அவருக்கு புரியும்படி எளிமையாக சொல்லியிருக்கலாம். ஆனால், அவரை மன்னிப்பு கேட்க வைப்பது தமிழர் மற்றும் தொழில்முனைவோரின் தன்மானத்திற்கு உடன்படாது. தொழில் முனைவோராக அவருக்கு உரிய மரியாதையைக் கொடுத்திருக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கட்டமைக்கப்பட்ட ஜிஎஸ்டி கூட்டத்திற்கு தேவையற்ற விவாதத்தால் கெட்ட பெயர் வருவது வருத்தம் அளிக்கிறது.
விசிக மது ஒழிப்பு மாநாடு: விசிக மது ஒழிப்பு மாநாடு வரவேற்கத்தக்கது. எங்கள் ஆட்சியில் அதிக போதைப் பொருள் விற்பனை, உங்கள் ஆட்சியில் அதிக போதைப் பொருள் விற்பனை என போட்டி போட்டுக் கொள்ளாமல், அதனைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் முன்வர வேண்டும். திருமாவளவன் முன்னெடுக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. தமிழகத்தை பாதுகாக்கக் கூடிய ஒரு முயற்சி இது. இந்த மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா? பங்கேற்காதா? என்பது தலைமை முடிவு செய்யும்.