தருமபுரி: அதிமுக முன்னாள் அமைச்சரான கே.பி.அன்பழகன், கடந்த 2016 - 2021 வரை உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா மற்றும் மகன்கள் சசி மோகன், சந்திர மோகன் மற்றும் உறவினர்கள் என 11 நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த 2023ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி போலீசார் தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நாளாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலிருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் இனி முதன்மை அமர்வு நீதிமன்றம் மூலம் சம்மன் அளிக்கப்பட்டு விசாரணை நடைமுறைகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் முறையாக சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் அன்று தொடங்கவில்லை. அதனைத் தொடர்ந்து 10 முறை வாய்தா போடப்பட்டது.
இந்நிலையில், 11வது முறையாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 8 பேரும் இன்று (ஏப்.26) காலை தருமபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கில் மீண்டும் ஜூன் 10ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் விக்ரம் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்! - COMPLAINT Against ACTOR VIKRAM