சென்னை: தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (டிச.9) மற்றும் நாளை (டிச.10) என இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் முதல் நாளான இன்று கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி குறித்து பல்வேறு கேள்விகள் கேட்டனர். அதற்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். மேலும் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய மத்திய அரசின் டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அரசினர் தனித்தீர்மானம் சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. தொடந்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மதுரை மாவட்டம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஒப்பந்தபுள்ளி கோரியதை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ஆனால், கனிமம் தொடர்பான சட்டங்களை 2023ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என தெரியவில்லை.
மத்திய அரசு கொண்டு வரவுள்ள இந்த டங்ஸ்டன் நிறுவனத்துக்கு எதிராக தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தின் தகவலை இதுவரை வெளியிடாதது ஏன்? எனவும் தெரிவில்லை. டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி எந்த விதமான கடிதமும் மத்திய அரசுக்கு வரவில்லை என, சுரங்கத் துறை அமைச்சர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
மக்களின் போராட்டம் பெரிதாக எழுந்த பிறகு திமுக மக்களை சமாதானம் செய்ய தற்போது தமிழக அரசு எதிர் கடிதம் எழுதியுள்ளது. எனவே மக்கள் போராட்டத்திற்கு பின் தான் திமுக அரசு சுரங்க அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பது போல் நாடகம் ஆடுகிறது. இரண்டு முறை பிரதமரை தமிழக முதலமைச்சர் சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க: "தவெக தலைவர் விஜயை மணிப்பூர் அழைத்து செல்ல தயார்"- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி!
அப்போது டங்ஸ்டன் நிறுவனம் சுரங்கம் அமைப்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்திருந்தால், அப்போதே தடுத்து நிறுத்தி இருக்க முடியும். தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்திருந்தால் எளிமையாக இதை தடுத்திருக்க முடியும். மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கத்தை தோண்ட 2023ஆம் ஆண்டே ஒப்பந்தம் கோரப்பட்டது. அப்போது திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
கனிம சட்ட திருத்தம் 2023க்கும் திமுக எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என தகவல் கிடைத்துள்ளது. இந்த சட்டத் திருத்தம் தமிழக மக்களின் உரிமைகள் பாதிக்கும் வகையில் உள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக அப்போதைய அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை முடக்கும் வகையில் எதிர்ப்பு தெரிவித்தோம். அதேபோல் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதில் தமிழக அரசு கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் அரசு அலட்சியமாக காட்டியுள்ளது
தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசுக்கு இருந்திருந்தால் இது குறித்து சிந்தித்திருப்பார்கள். திமுக அரசு செய்த தவறுகளை மறைக்க பல்வேறு நாடகங்களை சட்டப்பேரவையில் திமுகவினர் அரங்கேற்றியுள்ளனர். தமிழக மக்களை பாதிக்கக்கூடிய எந்த திட்டமாக இருந்தாலும் அவற்றை எதிர்க்கும் முதல் கட்சி அதிமுக தான்” என தெரிவித்துள்ளார்.