திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம், இன்று (பிப்.27) மேயர் தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரத்து 575 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 821 லட்சம் உபரி பட்ஜெட் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட் உரையை மேயர் தினேஷ் குமார் வாசித்து முடித்த பிறகு, பிரதான எதிர்கட்சியான அதிமுக கவுன்சிலர்கள் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டார்கள்.
அப்போது அதிமுகவினருக்கு வாய்ப்பளிக்காமல், திமுகவின் கூட்டணி கட்சி கவுன்சிலர்களுக்கு வாய்ப்பளித்ததாகக் கூறி, அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தை விட்டு வெளியேறிய அதிமுக கவுன்சிலர்கள், விடியா திமுக அரசைக் கண்டிக்கிறோம் என்றும், திமுக ஒழிக என்றும் கோஷங்கள் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, “பொதுமக்களுக்கு மாநகராட்சி 100 சதவீதம் வரி உயர்வு செய்துள்ளது. மேலும், மாநகராட்சியில் எதிர்கட்சியான அதிமுக கவுன்சிலர்களுக்கு கடைசி இருக்கை ஒதுக்கி, புறக்கணிக்கின்றனர். திருப்பூர் மாநகராட்சி மேயர் சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொள்கிறார்.
பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதுடன், இது குறித்து மாமன்றத்தில் பேசுவதற்கு எதிர்கட்சிக்கு அனுமதி தரவில்லை. மேலும் குப்பை வரியையும் அதிகப்படுத்தி உள்ளது. அதனைக் குறைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருப்பூர் மாநகராட்சியில் இரண்டு மடங்காக வரியை உயர்த்தி விட்டு, உபரி பட்ஜெட் என்று கூறிக்கொள்வது நியாயமான செயல் அல்ல.
வரி வசூலிப்பதற்காக பொதுமக்கள் மீது ஜப்தி நடவடிக்கையும், அராஜகத்தையும் மாநகராட்சி ஏவி விடுகிறது. மேலும், மாநகராட்சியில் எதிர்கட்சியான அதிமுக கவுன்சிலர்களுக்கு கடைசி இருக்கை ஒதுக்கி புறக்கணிக்கின்றனர். 10 சதவிகித வரி உயர்விற்விற்கே கூக்குரலிடும் கம்யூனிஸ்ட் கட்சியினர், இன்று இதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
இரட்டை நிலைப்பாடுடன் செயல்படுகிறார்கள். வரி விதிப்பை குறைக்காவிட்டால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாநகராட்சி அலுவலகம் எதிரில் மாபெரும் போராட்டம் நடைபெறும்” என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தூத்துக்குடி வருகை; அடிக்கல் நாட்ட உள்ள திட்டப் பணிகள் என்னென்ன?